வாழ்வில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய அதிசயம்.. காஞ்சிபுரம் 'நடவாவி கிணறு' பௌர்ணமியில் அருள் பாலிக்கும் வரதர்

By Ma Riya  |  First Published Feb 17, 2023, 4:11 PM IST

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள நடவாவி கிணறின் சிறப்பு.. வரலாறு..முழுத்தகவல்கள்..! 


காஞ்சிபுரம் என சொன்னாலே பட்டும் கோயில்களும் தான் நம் நினைவுக்கு வரும். ஆனால் இங்கு பல அதிசயங்களை தன்னுள் கொண்டுள்ள கிணறு உள்ளது. பல்லவர்களின் காலத்தில் அமைக்கப்பட்டதாக கூறப்படும் நடவாவி கிணறு பழமையானது. இதில் வாவி என்றால் கிணறு என பொருள். நட என்பது 'நடந்து வருதலை' குறிக்கிறது. 

காஞ்சிபுரத்தில் உள்ள ஐயங்கார் குளம் எனும் ஊரில் அமைந்துள்ள சஞ்சீவிராய சுவாமி கோயில் குளத்திற்கு பக்கத்தில் தான் நடவாவி கிணறு உள்ளது. இந்தக் கோயிலுக்கு சென்றால் அழகிய வேலைபாடுகளுடன் காணப்படும் தோரண வாயிலை காண்பீர்கள். அதைத் தொடர்ந்து சென்றால் பழமையான படிகளைக் கொண்ட பாரம்பரியம் கொண்ட அந்தக் கிணற்றை காணலாம். குறிப்பாக கிணற்றுக்குள் ஒரு கிணறாக இருக்கிறது நடவாவி கிணறு அமைப்பு. 

Latest Videos

நடவாவி கிணறின் சிறப்பு 

இந்த கிணறுக்கு போக வேண்டுமென்றால் சுரங்கம் போன்ற பாதை இருக்கிறது. அதனுள் இறங்கி சென்றால் முதலில் 27 படிகள் தான் போகமுடியும். இதை 27 நட்சத்திரங்களின் அடிப்படையாக வைத்துள்ளதாக கூறுவார்கள். அப்படியே உள்ளே சென்றால் 12 தூண்கள் உடைய ஒரு மண்டபம் இருப்பதை காணலாம். அதற்குள் தான் ஒரு கிணறு இருக்கிறது. அதுதான் நடவாவிக் கிணறு. வற்றாத கிணறு. இதில் மொத்தமாக 48 படிகள் இருக்கின்றன. இதற்கு பின்னும் ஒரு காரணம் இருக்கிறது. ஒரு மண்டலத்தை குறிக்க தான் இப்படி அமைத்திருப்பதாக கூறுகிறார்கள். 

பெருமாள் அவதாரம் 

நடவாவி கிணறின் கட்டடக் கலையை வியப்பதோடு நிறுத்தி கொள்ளமுடியாது. இங்கு கிணத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள 12 தூண்களில் பெருமாளின் அவதாரங்கள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. இந்த கிணறு வருடம் முழுவதும் தண்ணீர் நிரம்பியே காணப்படுமாம். ஒவ்வொரு சித்ரா பௌவுர்ணமியிலும் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் இந்தக் கிணற்றில் இறங்கி அருள்பாலிப்பார். அப்போது இந்த கிணற்று நீரை வாரி இறைப்பார்கள். 

அந்த சமயம் அலங்காரங்களுடன் நடவாவி கிணற்றுக்குள் இறங்கும் வரதராஜர் பெருமாளை காண கண்கோடி வேண்டும். மூன்றுமுறை பெருமாள் கிணற்றை சுற்றி பவனி வருவார். ஒவ்வொரு முறைக்கும் நான்கு திசைகளிலும் தீபாராதனை செய்வார்கள். இப்படி மொத்தம் 12 முறை தீபாராதனை செய்வது பாரம்பரியமாக பின்பற்றப்பட்டுவருகிறது. 

சிறப்பு வழிபாட்டை தொடர்ந்து பக்தர்கள் நடவாவி கிணற்றில் நீராடி புண்ணியம் பெறுகின்றனர். அதுமட்டுமில்லை சித்திரை மாத பௌர்ணமி முடிந்த பிறகும் 15 முதல் 20 நாள்வரை இங்கு நீராடி அருள் பெறலாம். சித்ரா பௌர்ணமி அன்று மட்டும் தான் இந்த கிணற்றை முழுமையாக காண முடியுமாம். மற்ற தினங்களில் படிக்கட்டுகள்வரை நீர் நிரம்பியே காணப்படும். இந்த கிணற்றை வாழ்வில் ஒருமுறையாவது கண்டு மகிழுங்கள். சித்ரா பௌர்ணமி அன்று கண்டால் கூடுதல் சிறப்பு. 

இதையும் படிங்க: மகா சிவராத்திரி 2023: எப்போது கண் விழிக்க வேண்டும்? விரத ஆரம்பம் முதல் நிறைவு வரை முழுவிவரம்..!

இதையும் படிங்க:மகா சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் செய்யவே கூடாத தவறுகள்.. மீறினால் விரதம் இருப்பதே வீண்..!

click me!