திருச்சி ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் திருக்கைத்தல சேவை - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

By Velmurugan sFirst Published Jan 9, 2023, 9:35 AM IST
Highlights

பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கத்தில் பராங்குச நாயகியாக பெண் வேடமிட்டு வரும் நம்மாழ்வாரை ஆட்கொள்ளும் ஆழ்வார் மோட்சம் அருளும் திருக்கைத்தலசேவையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோகவைகுண்டம் என்றும் அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் கடந்த டிசம்பர்  22ம் தேதி முதல் வைகுண்ட ஏகாதசி பெருவிழா திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இராப்பத்து திருவிழாவின் முதல்நாளில் சொர்க்கவாசல் திறப்பு கடந்த 2ம்தேதி நடைபெற்றது இதனைத் தொடர்ந்து, நம்மாழ்வாருக்கு காட்சியளிக்கும்பொருட்டு நம்பெருமாள் நின்றகோலத்தில் காட்சியளித்ததை உணர்த்தும் வகையில், வருடத்திற்கு ஒருமுறை ஸ்ரீரங்கத்தில் மட்டுமே நடைபெறும் திருக்கைத்தல சேவை இராப்பத்து திருவிழாவின் 7ம் திருநாளான இன்று நடைபெற்றது.

தமிழக ஆளுநருக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள்..! அரசுக்கு எதிராக அதிமுக..! அனல் பறக்கும் சட்டப்பேரவை கூட்டம்

நம்பெருமாள்(உற்சவர்) முத்துப் பாண்டியன் கொண்டையணிந்து, நீலநாயகம், அடுக்கு பதக்கம், காசு மாலையணிந்து மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு பரமபதவாசல் வழியாக வழிநடை உபயங்கள் கண்டருளி மாலை 5.45மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபத்தை அடைந்தார்.

இதையடுத்து நம்பெருமாள் திருக்கைத்தல சேவை மாலை 6 மணிக்கு தொடங்கியது. நம்மாழ்வார் பராங்குச நாயகி திருக்கோலத்தில் எழுந்தருள, திருமாமணி மண்டபத்தில் நம்பெருமாளை கோவில் பட்டர்கள் தங்களது இரு கைகளிலும் ஏந்தியபடி நம்மாழ்வாருக்கும், பக்தர்களுக்கும் சேவை சாதிக்க செய்தனர்.

பொங்கல் பரிசு ரூ.1000 எப்படி வழங்க வேண்டும்..! ரேசன் கடைகளுக்கு புதிதாக உத்தரவிட்ட தமிழக அரசு

சுமார் 15 நிமிடங்கள் நம்பெருமாளை கைகளில் ஏந்தியபடியே பக்தர்களுக்கு திருக்கைத்தல சேவை நடத்தப்பட்டது. வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இந்த சேவை நடைபெறுகிறது என்பதால் ஆயிரங்கால் மண்டபத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என பக்தி கோஷத்தில் நம்பெருமாளை தரிசித்தனர்.

click me!