
மார்கழி என்றால் சிவபெருமானின் நினைவு தான் பெரும்பாலானோருக்கு வரும். கணவனை நேசிக்கும் பெண்களுக்கு திருவாதிரை நோன்பு நினைவுக்கு வரும். ஒவ்வொரு மார்கழியிலும் திருவாதிரை நட்சத்திரத்தில் அனைத்து சிவாயலங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதிலும் ஆருத்ரா தரிசனம் மிகவும் பிரசித்தி பெற்றது.
ராமநாதபுரத்தில் உள்ள திரு உத்தரகோசமங்கை கிராமத்தில் உள்ள பழமையான கோயில் தான் மங்களநாதர் கோயில். இங்கு மரகத நடராஜர் சன்னதி அமைந்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டிலும் இங்கு குடி கொண்டிருக்கும் மரகத நடராஜர் சன்னதி ஆருத்ரா தரிசன தினத்தில் மட்டும் திறக்கப்படும். அந்த ஒரு நாள் தான் அந்த சன்னதி விழாகோலம் பூண்டிருக்கும்.
இந்த முறை ஆருத்ரா தரினத்தை முன்னிட்டு திரு உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. தரிசன விழா தொடங்கியதில் இருந்து நாள்தோறும் சுவாமி-அம்பாள், நடராஜரும் மக்களுக்கு விஷேசமாய் அருள்பாலித்து வருகின்றனர். இந்த ஆலயத்தின் சிறப்பே இங்கு அருள்பாலிக்கும் மரகதக் கல் நடராஜர் மீது பூசிய சந்தனத்தை சூடான நீரில் கரைத்து அருந்தினால் எந்த நோயாக இருந்தாலும் குணாமாகும் என்பது ஐதீகம்.
இதையும் படிங்க; Arudra Darshan 2023; நன்மைகளை வாரி வழங்கும் ஆருத்ரா தரிசன நேரம் மற்றும் தேதி முழு தகவல்!
புராணங்களில் உத்தரகோச மங்கை தான் சிவபெருமானின் சொந்த ஊர் என்பதாக கூறப்பட்டுள்ளது. வரலாற்றில் சிவபெருமானின் திருவிளையாடல்கள் மதுரையைச் சுற்றி நடந்ததாகத் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. பாண்டிய மன்னர்கள் இந்த கோயிலில் முக்கியமான திருப்பணிகளை செய்து சிவனருள் பெற்றனர். உத்தரகோச மங்கையை சிவபுரம், தட்சிண கயிலாயம், சதுர்வேதி மங்கலம், இலந்தி கைப் பள்ளி, பத்ரிகா க்ஷேத்திரம் பிரம்மபுரம், வியாக்ரபுரம், மங்களபுரி, பத்ரிசயன சத்திரம், ஆதி சிதம்பரம் போன்ற பல் பெயர்களில் அழைத்ததாகவும் அது பாண்டியர்களுக்கு தலைநகராக விளங்கியது என்றும் கல்வெட்டுகளும் ஓலைச்சுவடிகளும் கிடைத்துள்ளன.
உத்தரகோச மங்கை கோயிலில் நடைபெறும் ஆருத்ரா திருவிழாவில் முக்கியமான பகுதியாக கருதப்படும் மரகத நடராஜர் சன்னதியானது நேற்று காலை 8 மணிக்கு திறக்கப்பட்டது. அப்போது நடராஜர் மீது பூசப்பட்ட சந்தனங்கள் களையப்பட்டு, பால், பன்னீர், மாபொடி, மஞ்சப்பொடி, திரவியப்பொடி, தேன், இளநீர் உள்பட 32 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. நேற்றிரவு 11 மணி அளவில் மறுபடியும் ஆருத்ரா அபிஷேகம் நடராஜருக்கு நடைபெற்றது. இன்று காலையில் சூரிய உதயமாகும் நேரத்தில் நடராஜருக்கு சந்தனம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரங்களுடன் பூஜை நடைபெற்றது. இன்று மாலை வரை மட்டுமே மரகத நடராஜர் சன்னதியில் தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி. அதன் பிறகு நடராஜர் சன்னதியானது மூடப்படும். அருகில் உள்ள பக்தர்கள் விரைந்து சென்று அருளை பெற்று கொள்ளுங்கள்.
இதையும் படிங்க; ஆசைப்பட்டதை அடையணுமா? வெறும் 21 நாள் பிரம்ம முகூர்த்த வழிபாடு பண்ணி பாருங்க!