Akshaya Tritiya 2024 : அட்சய திருதியை உருவான கதை பற்றி தெரியுமா..? முழு விளக்கம் இதோ!

By Kalai SelviFirst Published May 1, 2024, 10:22 AM IST
Highlights

அட்சய திருதியை இந்துக்களால் கொண்டாடப்படும் மிகவும் புனிதமான நாட்களில் ஒன்றாகும். ஆனால் இந்த நாள் கொண்டாடுவது எவ்வாறு உருவாகியது என்று தெரியுமா.?

சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் வரும் திரிதியை தான் நாம் 'அட்சய திருதியை' ஆக கொண்டாடுகிறோம். 'அட்சய' என்றால் வளர்வது என்று பொருள். அதாவது, அட்சய திருதியை நாளில் என்ன பொருள் வாங்கினாலும் அது பலமடங்கு வளரும் என்பதுதான் அதற்கு அர்த்தம். அதுமட்டுமின்றி, அள்ள, அள்ளக் குறையாமல் செல்வத்தை அள்ளி தரும் சிறப்புமிக்க திருநாளாக அட்சய திருதியை போற்றப்படுகிறது. இதனால்தான் அந்நாளில் மக்கள் தங்கத்தை வாங்குகிறார்கள்.

அட்சய திருதியை அன்று இவற்றை செய்யுங்கள்: பொதுவாகவே, அட்சய திருதியை அன்று தங்கத்தை தான் மக்கள் வாங்குவார்கள். ஆனால், அதை விட அந்நாளில் நீங்கள் ஏழைகளுக்கு தானம் செய்தால், பல மடங்கு புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதுபோல் அந்நாளில்,  பிறருக்கு நீர்மோர், தண்ணீர் கூட தானம் செய்வது சிறந்தது ஆகும்.

அட்சய திருதியை வரலாறு: 
பாஞ்சாலை நாட்டை பூரியசஸ் என்ற மன்னன் ஆண்டு வந்த சமயத்தில், அந்நாட்டில் கடும் வறட்சி நிலவியது. இதனால் மன்னர் உட்பட மக்கள் அனைவரும் வறட்சியால் கடும் அவதிப்பட்னர். இந்நிலையில், பாஞ்சாலை நாட்டின் மீது வேற்று நாட்டு மன்னர்கள் போர் தொடுத்து பாஞ்சாலை நாட்டை கைப்பற்றினர். நல்ல சமயத்தில், பாஞ்சாலை மன்னன் எதிரிகள் கைகளில் சிக்காமல் தனது மனைவியுடன் காட்டுக்குள் சென்று தப்பி ஓடிவிடான்.

இதையும் படிங்க:  Akshaya Tritiya 2024 : அட்சய திருதியை அன்று உருவாகும்  மங்களகரமான யோகம்; இந்த 3 ராசிக்காரர்கள் அதிஷ்டசாலிகள்.!

அப்போது, வழியில் சில முனிவர்களை சந்தித்து தனது குறைகளை அவர்களிடம் முறையிட்டு, இதற்கான காரணம் என்ன என்று வேண்டியதால், முனிவர்கள் ஞான திருஷ்டி மூலம் அவனது இந்த நிலைமைக்கான காரணத்தை கண்டறிந்து மன்னனிடம் கூறினார்கள். ஆதாவது, மன்னர் பூர்வ ஜென்மத்தில் கொள்ளைக்காரனாக இருந்ததாகவும், பிறரை வழி மறித்து அவர்கள் பொருட்களை எல்லாம்  அபகரித்துக் கொண்டதாகவும், அப்போது செய்த பாவத்தின் காரணமாக தான் இப்போது இந்த நிலை ஏற்படுவதற்கு காரணம் என்றனர். அதுமட்டுமின்றி, மன்னர் அரசனாவதற்கு காரணம்.. ஒரு முறை கொள்ளை அடித்த சமயத்தில் தெரிந்தோ தெரியாமலோ ஒரு அந்தணருக்கு தண்ணீர் அளித்து உதவியால் தான் இப்போது மன்னராக இருப்பதற்கு காரணம் என்றனர்.

இதை எல்லாம் கேட்ட மன்னன் தான் செய்த பாவங்களுக்காக மனம் உருகி வருந்தினான். அதே சமயம்,  செய்த ஒரு உதவிக்காக தன்னை அரசனாக பிறக்க வைத்த கடவுளை நினைத்து 
கண்ணீர் விட்டு வழிப்பட்டான். பிறகு மன்னர் அந்தக் காட்டிலேயே  விஷ்ணுவை நினைத்து தியானம் செய்து வாழ்ந்து வந்தான். மேலும் ஒவ்வொரு அட்சய திருதியை அன்றும் வெயிலில் வருபவர்களுக்கு நிழல் கொடுத்தும், குடிநீர் தானம் செய்தும் வந்தான்.

இதையும் படிங்க: Akshaya Tritiya 2024: அட்சய திருதியை அன்று தவறுதலாக கூட 'இந்த' தவறுகளை செய்யாதீங்க..லட்சுமி தேவி கோபப்படுவாள்!

மன்னனின் இந்த தொண்டைக் கண்டு விஷ்ணு அவனுக்குக் காட்சியளித்து, என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு மன்னர்.. 'நான் அடுத்த பிறவியில் புழுவாய் பிறந்தாலும், உன் மீது பக்தி கொண்டவனாக இருக்க வேண்டும்' என்றான். பிறகு விஷ்ணு மன்னருக்கு அந்த வரத்தைக் கொடுத்தார். விஷ்ணு மன்னனுக்கு காட்சி அளித்த நாள் அட்சய திருதியை ஆகும். பிறகு, மன்னன் செய்த தானத்தின் பலனாக, மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி நல்ல முறையில் ஆட்சி செய்தான்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!