புதுச்சேரியில் பெய்த கனமழையால் அம்மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சூறாவளி காற்றில் மரங்கள் முறிந்து விழுந்து சட்டப்பேரவை, வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் சேதமடைந்தன
புதுச்சேரியில் கடந்த ஒரு மாதமாக 100 டிகிரியை தாண்டி வெயிலுடன் அனல் காற்று வீசி வந்தது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே பெரும் அவதி அடைந்து வந்தனர். இதனிடையே, கடந்த இரண்டு தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு அவ்வப்போது லேசான மழை பெய்து வந்தது.
இந்த நிலையில், நேற்று இரவு இடி மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது. இந்த மழையினால் சாலை முழுவதும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது வாகன ஓட்டிகளும் கடுமையான அவதிக்கு ஆளாகினார்கள்.
இடி மின்னலுடன் சூறாவளி காற்றும் வீசியதால் உப்பளம், முதலியார்பேட்டை, செட்டி வீதி, வைசியால் வீதி, காமராஜ் சாலை, மறைமலை அடிகள் சாலை, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையில் இருந்த மரங்கள் முறிந்து சாலை மற்றும் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் காரின் மீது விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. சாலையில் முறிந்து விழுந்த மரங்களால், வாகனங்கள் செல்ல முடியாமல் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. பொதுமக்களம் பெரும் பாதிப்புக்கு ஆளாகினார்கள்.
அதேபோல், சூறாவளி காற்றில் சிக்கி புதுச்சேரி சட்டப்பேரவை அலுவலகம் அருகே இருந்த மரங்கள் முறிந்து நுழைவாயில் முன்பு விழுந்ததில் அங்கிருந்த நுழைவாயில் கதவுகள் சேதம் அடைந்தது. அதேபோன்று சாரம் பகுதியில் தானே புயலுக்கு தப்பித்த 200 ஆண்டு பழமையான ஆலமரம் வட்டார வளர்ச்சி போக்குவரத்து துறை அலுவலகத்தின் மீது வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில் அந்த அலுவலகம் முழுவதும் இடிந்து தரைமட்டமானது.
மது விற்பனையில் சலுகைகள்.. விளம்பரம் செய்தால் அவ்வளவுதான் - ஆப்பு வைத்த புதுச்சேரி அரசு!
அது மட்டுமில்லாமல் சாலைகளில் இருந்த விளம்பர தட்டிகள், பேனர்கள், மின் ஒயர்கள் என அனைத்தும் சாலையில் விழுந்து சிதறி கிடந்ததால் புதுச்சேரியே அலங்கோலமாக காட்சியளிக்கிறது. மேலும், சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் மாவட்ட நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர். சாலையில் விழுந்த மரங்கள் ஒவ்வொன்றையும் பொதுப்பணித்துறை நகராட்சி மற்றும் தீயணைப்பு துறை ஊழியர்கள் அகற்றி வருவதால் போக்குவரத்து சீராகி வருகிறது.
புதுச்சேரியில் பெய்த இடி மின்னலுடன் கூடிய சூறாவளி காற்று மழையால் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் சுமார் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.