நாளுக்கு நாள் அதிகரிக்கும் கஞ்சா கும்பலின் அட்டூழியம்; எம்.எல்.ஏ. நேரு ஆவேசம்

By Velmurugan s  |  First Published Sep 11, 2023, 10:23 PM IST

புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கஞ்சா விற்பனை மற்றும் அதன் மூலம் அதிகரிக்கும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த வலியுறுத்தி எம்.எல்.ஏ. நேரு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


புதுவை உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட கோவிந்தசாலை அந்தோணியார் கோவில் வீதி, அரசு குடியிருப்பு பகுதி மற்றும் கண்டாக்டர் தோட்டம் அரசு குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த பகுதிகளில் ரௌடிகள் மற்றும் போதை கும்பல் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சட்டசபையிலும் தொகுதி எம்.எல்.ஏ. நேரு பேசியுள்ளார். ஆனாலும் காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனிடையே நேற்று மாலை கோவிந்தசாலை அந்தோணியார் கோவில் வீதி அரசு குடியிருப்பு பகுதியில் கஞ்சா போதையில் சில இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்டு அப்பகுதியைச் சேர்ந்த பெண் வழக்கறிஞரை தாக்கியுள்ளனர். இந்த நிலையில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காவல் துறையினரை கண்டித்து உருளையன்பேட்டையில் உள்ள சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு நேரு எம்.எல்.ஏ. தலைமையில் தொண்டர்கள் மற்றும் மனிதநேய மக்கள் சேவை இயக்கம் நிர்வாகிகள் திரண்டு முற்றுகையிட்டனர்.

Latest Videos

அரசுப்பள்ளி ஆசிரியரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு; மாணவர்களுடன் பெற்றோரும் போராட்டத்தில் ஈடுபட்ட நெகிழ்ச்சி

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட நேரு எம்.எல்.ஏவிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். காவல் துறையினரிடம் நேரு எம்.எல்.ஏ. போதை கும்பல் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், கஞ்சா கும்பல் பீகார் தொழிலாளர்களை தாக்கி பணத்தை பறித்து வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பாக சீனியர் போலீஸ் சூப்பிரண்டு சந்திக்க வேண்டும் என கூறினார். அவரிடம் காவல் துறையினர் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு கூட்டம் ஒன்றில் பங்கேற்க சென்றிருப்பதால் மாலை அவரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கும்படி கூறி சமாதானப்படுத்தினர். இதனையடுத்து நேரு எம்.எல்.ஏ. தலைமையிலான அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தின் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.

பள்ளி மாணவர்களின் நெஞ்சத்தில் ஜாதி தீயை பற்றவைக்கும் பெற்றோர்; பட்டியலின பெண் சமைப்பதற்கு எதிர்ப்பு

இதுகுறித்து நேரு எம்.எல்.ஏ கூறும் போது, காவல் துறையினருக்கு தெரிந்தே கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் காவலர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை, மேலும் இரண்டு குழுக்களாக பிரிந்து கஞ்சா விற்பனை செய்வதுடன் வட மாநில தொழிலாளர்களை  தாக்கி பணம் பறித்து வருகிறார்கள். 

மேலும் கஞ்சா விற்பனை செய்து காவல் நிலையத்தில் வாலிபர்களை கைது செய்தால் 33 சட்டமன்ற உறுப்பினர்களில் யாரும் அவர்களுக்கு சிபாரிசு செய்யக் கூடாது என அவர் கேட்டுக் கொண்டார். மேலும் புதுச்சேரி வரும் சுற்றுலா பயணிகளுக்கும் கஞ்சா ஆசாமிகளால் பாதுகாப்பில்லை. அவர்களுக்கும் பாதுகாப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் நேரு எம்எல்ஏ கேட்டுக் கொண்டார்.

click me!