போலீசாரிடம் தொப்பி இருக்கலாம் தொப்பை இருக்கக்கூடாது என்றும், போலீசார் ஃபிட்டாக இருக்க வேண்டும் என புதுச்சேரி காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை பேசினார்.
புதுச்சேரி காவல்துறையில் 10, 15, 25 ஆண்டுகள் பணி முடித்த காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு 10 ஆண்டுகள் பணிப்புரிந்தவர்களுக்கு தலைமை காவலர் பதவியும், 15 ஆண்டுகள் பணிப்புரிந்தவர்களுக்கு துணை உதவி ஆய்வளர் பதவியும், 25 ஆண்டுகள் பணிப்புரிந்தவர்களுக்கு உதவி ஆய்வாளர்களாகவும் என சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்களுக்கு பதவி உயர்வை வழங்கினர்.
புதுவை சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை, வாக்குமூல ஆவணங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு
விழாவில் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், சமுதாயத்தை கண்டித்து வளர்ப்பதை விட கண்காணித்து வளர்க்க வேண்டும். அது காவல்துறை அலுவலகத்துக்கும் பொருந்தும், காவல் நிலையத்துக்கும் பொருந்தும். மேலும் போலீசாரிடம் தொப்பி இருக்கலாம், தொப்பை இருக்கக்கூடாது. தொப்பை அதிகரிக்க, அதிகரிக்க வாழ்நாள் குறையும். எனவே, போலீசார் ஃபிட்டாக இருக்க வேண்டும்.
வருங்கால சந்ததியரை போதைப் பழக்கத்தில் இருந்து காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. காவல் துறையினர் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் தான் பொதுமக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவர்களின் நம்பிக்கைக்கு நாம் உண்மையாக இருக்க வேண்டும் என்றார்.