புதுச்சேரி சட்டப்பேரவையில் கல்வி உதவித்தொகையை பெறுவதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சட்டப்பேரவை வளாகத்தில் திரண்டிருந்த நிலையில், 4 பேருக்கு மட்டும் வழங்கிவிட்டு முதல்வர் புறப்பட்டுச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி 6.31 கோடி அளவிற்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதற்காக 800க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள், ஏழை எளிய மக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சட்டசபை வளாகத்தில் ஒன்று திரண்டனர். அப்போது அனைவரும் வரிசையாக சட்டப்பேரவையில் நிற்கவைக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நின்று கொண்டிருந்தனர். அதன் பிறகு முதலமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு தீவிர நாய் பிடிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள்
ஆனால் சட்டசபை வந்த முதல்வர் ரங்கசாமி நான்கு பேருக்கு மட்டுமே உதவித்தொகையை வழங்கிவிட்டு அலுவலகத்திற்கு சென்று விட்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சபாநாயகர் செல்வம் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா இருவரும் உதவித்தொகையை தொடர்ந்து வழங்கினார்கள். அவர்களும் சிறிது நேரத்தில் அலுவலகம் புறப்பட்டு சென்று விட்டனர்.
இதனை அடுத்து நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் விரக்தி அடைந்து ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் சாய். இளங்கோவனிடம் பெற்றோர்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது நான்கு பேருக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்றால் நான்கு பேரை மட்டுமே வர சொல்லி இருக்க வேண்டும் எதற்காக 800 மாணவர்களை வர சொன்னீர்கள் என்று கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து ஆதிதிராவிட நலத்துறை இயக்குனர் சாய். இளங்கோவன் சமாதானப்படுத்தியும் பெற்றோர்கள் கேட்கவில்லை. தொடர்ந்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் புதுச்சேரி வளாகத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து வரிசையாக நிற்கவைக்கப்பட்டிருந்த மாணவர்கள் மற்றும் உதவி தொகை பெற வந்தவர்கள் அனைவரும் சட்டப்பேரவையில் இருந்து கலைந்து பாரதி பூங்காவிற்கு சென்றனர். அங்கு வரிசையாக நிற்கவைக்கப்பட்டு மீண்டும் அதிகாரிகளால் உதவி தொகை வழங்கப்பட்டது.