போக்குவரத்து ஊழியர்கள் அதிகாரிகளை குறை கூறுவதை விட்டு நஷ்டத்தில் இயங்குவதை லாபத்தில் இயக்க முன்வர வேண்டும் என புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தின் புதிய பேருந்துகள் துவக்கவிழாவில் முதலமைச்சர் ரங்கசாமி ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தின் புதிய பேருந்துகள் துவக்கவிழா இன்று நடந்தது. இதில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகியோர் கலந்துகொண்டு கொடி அசைத்து புதிய பேருந்துகளின் சேவையை துவக்கி வைத்தனர். 17.30 கோடி ரூபாய் செலவில் புதிதாக 38 பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.
இதில் 26 பேருந்துகள் புதுச்சேரிக்கும், 12 பேருந்துகள் காரைக்காலுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து காரைக்கால், மாஹே, நாகர்கோவில், சென்னை, பெங்களூரு, கும்பகோணம், குமுளி, திருப்பதி, விழுப்புரம், கடலூர் ஆகிய தொலைதூர வழிதடங்களில் செல்கிறது. மேலும் காரைக்காலில் இருந்து கோயம்புத்தூர், கும்பகோணம், சென்னை, சிதம்பரம் ஆகிய வழித்தடங்களில் செல்கிறது.
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் டிடிவி தினகரன் துணைவியாரோடு சிறப்பு பிரார்த்தனை
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, அரசு பேருந்துகளில் அதிக அளவில் பயணிகள் பயணம் செய்தால் தான் போக்குவரத்து கழகத்திற்கு வருமானம் கிடைக்கும். அப்பொழுது தான் உங்களுக்கு சம்பளம் கொடுக்க முடியும். மேலும் பொதுத்துறை நிறுவனங்களை நடத்த அரசு நிதி கொடுக்கும். ஆனால் ஊழியர்கள் அந்த நிறுவனம் மூலம் லாபத்தை ஈட்டவேண்டும். ஆனால் அவ்வாறு செய்வதில்லை. அதிகாரிகளை குறை கூறிவருகின்றனர். நாங்கள் அனுப்பும் அதிகாரிகள் 2 பேர் தான் ஆனால் ஊழியர்கள் நீங்கள் ஆயிரம் பேர் இருக்கும் போது அதிகாரிகளை குறை கூற கூடாது.
ஏற்கனவே 31 சதவீதம் லாபம் வந்தது. தற்போது அது இல்லை. இதற்கு ஊழியர்களின் பொறுப்பற்ற தன்மை தான் காரணம். மேலும் சென்னை செல்ல மக்கள் புதுச்சேரி அரசு பேருந்தை தான் அதிகம் விரும்புகிறார்கள். எனவே போக்குவரத்து கழகத்தை லாபத்தில் இயக்க ஊழியர்கள் முன்வர வேண்டும் என முதலமைச்சர் ரங்கசாமி பேசினார்.
மூணாறில் தமிழக அரசுப் பேருந்தை வழிமறித்த படையப்பா யானை; மரண பீதியில் பயணிகள்
விழா முடிவில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், புதுச்சேரியில் போதை பொருட்களை அனுமதிக்க முடியாது. தமிழகத்தில் போதைப் பொருள் தொடர்பாக முக்கிய பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் புதுச்சேரியில் இரும்பு கரம் கொண்டு அடக்கி வருகிறோம். பள்ளி மாணவர்கள் பக்கம் போதைப் பொருள் போகவே கூடாது. டிஜிபியை அழைத்து கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன் என்றார்.