புதுச்சேரியில் பாஜக வேட்பாளர் நமசிவாயத்துக்கு வரவேற்பு அளிப்பது தொடர்பாக இந்திய ஜனநாயகக் கட்சி நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியில் அங்கம் வகிக்கும் இந்திய ஜனநாயக கட்சியில் புதுவை மாநில தலைவராக பொறுப்பு வகித்தவர் சத்தியவேல். இவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி நடந்ததால் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நீக்கப்பட்டு புதிய தலைவராக அண்ணாதுரை நியமனம் செய்யப்பட்டார்.
ED, IT எல்லாம் எங்களுக்கு ஜூஜூபி; ஜெயில கட்டுனதே எங்களுக்காக தான் தம்பி - செல்லூர் ராஜூ
ஆனால் இந்திய ஜனநாயக கட்சியில் இருந்து சத்தியவேல் நீக்கப்பட்டாலும் தொடர்ந்து கட்சியின் பெயரை பயன்படுத்தி பல்வேறு இடங்களில் நன்கொடை பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் நமச்சிவாயத்தை ஆதரித்து கூட்டணி கட்சி சார்பில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்க வகிக்கும் ஐ.ஜே.கே சார்பில் தனியாக வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.ஜே.கே புதிய தலைவரான அண்ணாதுரையின் ஆதரவாளர்கள், பாஜக தலைமை அலுவலகத்தின் முன்பு ஒன்று கூடினர். அப்போது அங்கிருந்த சத்தியவேல் ஏற்பாடு செய்திருந்த பிரச்சார வாகனத்தின் பேனர்களை கிழித்து அவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருவருக்கு ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்வதில் ஐ.ஜே. கே-வினர் ஒருவருக்கொருவர் பாஜக தலைமை அலுவலகம் முன்பு சரமாரியாக தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.