புதுச்சேரி வனத்துறையில் உள்ள மான்களுக்கு காய்கறி மற்றும் பழங்களால் உணவளித்து பிறந்தநாள் கொண்டாடிய தமிழ் அறிஞரின் செயல் புதுச்சேரியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி தன்னம்பிக்கை கலைக்குழு சார்பில் முன்னாள் பேராசிரியரும் தமிழறிஞருமான நா.இளங்கோவின் பிறந்தநாள் விழா வனத்துறை வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் பொறியாளர் தமிழ் திருவாட்டி அனிதா பாலகிருஷ்ணன், அனைவரையும் வரவேற்க சொற்கோ திருநாவுக்கரசு, பிரான்ஸ் தமிழ் சங்க தலைவர் கோகுல கருணாகரன், தன்னம்பிக்கை கலை குழு தலைவி எலிசபெத் ராணி உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள் பாவலர்கள், புலவர்கள் கவிஞர்கள் மத்தியில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் தமிழ் பாக்கள் வாசிக்கப்பட்டு நான் இளங்கோவுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து தன்னம்பிக்கை கலை குழு சார்பில் வேஷ்டி சட்டை, புடவை, மற்றும் வெற்றிலை பாக்கு, பழங்களுடன் தமிழ் அறிஞர் தம்பதியினருக்கு சீர்வரிசை வழங்கப்பட்டது. தொடர்ந்து வனத்துறையில் உள்ள மான்களுக்கு மாதுளை, கொய்யா, கிர்ணி பழம், தர்பூசணி கேரட், வெள்ளரி உள்ளிட்ட பல்வேறு காய்கள் மற்றும் பழங்களால் உணவளிக்கப்பட்டது.
தொடர்ந்து வனத்துறையில் மகிழம்பு மர கன்றுகள் நடப்பட்டும் விதைகள் நடப்பட்டும் பிறந்த நாள் விழாவை உற்சாகமாக கொண்டாடினார்கள். மேலும் விழாவில் கலந்துகொண்ட தமிழ் அறிஞர்களுக்கும் தமிழ் புலவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் பாவலர் தங்கப்பா எழுதிய மகளிர் நலம் மாந்த நலம் என்ற மகளிர் இளையோர் நல விழிப்புணர்வு நூல்களும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக்கை தவிர்த்து துணி பைகளை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் அனைவருக்கும் மஞ்சப்பைகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான தமிழ் அறிஞர்கள் திரளாக கலந்து கொண்டு பிறந்தநாள் கொண்டாடிய தமிழறிஞர் நா. இளங்கோவிற்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
பிறந்தநாள் என்றால் அதை ஆடம்பரமாக கொண்டாடி விளம்பரம் செய்து வருபவர்கள் மத்தியில் தமிழறிஞர் ஒருவர் தனது பிறந்த நாளை முன்னிட்டு வனத்துறையுள்ள மான்களுக்கு உணவளித்து பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் புதுச்சேரியில் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.