2020 தமிழ்நாட்டு நாளுக்கு வாழ்த்து போட்டீங்க.. அப்புறம் ஏன் மாத்தணும்.? ஸ்டாலினுக்கு ஞாபகப்படுத்திய அண்ணாமலை!

By Asianet TamilFirst Published Oct 31, 2021, 8:56 PM IST
Highlights

தமிழக அரசு டாஸ்மாக் கடைகளுடன் சேர்ந்திருக்கும் பார்களைத் திறக்க நடவடிக்கை எடுத்திருக்கிறது. ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 21 தீர்த்தக் கிணறுகளை இதுவரை இந்த அரசு திறக்காமல் இருக்கிறது.

பெட்ரோலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவதன் மூலம்தான் விலை உயர்வுப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு ஏற்படுத்த முடியும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பொன். ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராக இருந்தபோது கன்னியாகுமரி மாவட்ட இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு ரூ.106 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கு நிலம் கையகப்படுத்துவதுதான் பிரச்சினை. ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இரண்டரை ஏக்கர் நிலத்தை மாவட்ட நிர்வாகம் ஒதுக்கியது. ஆனால், 5 ஏக்கர் நிலம் வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம். இதன் மூலம் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த மாவட்டத்தில் பயன்பெறுவார்கள்.

தமிழக அரசு டாஸ்மாக் கடைகளுடன் சேர்ந்திருக்கும் பார்களைத் திறக்க நடவடிக்கை எடுத்திருக்கிறது. ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 21 தீர்த்தக் கிணறுகளை இதுவரை இந்த அரசு திறக்காமல் இருக்கிறது. தீர்த்தக் கிணறுகளை நம்பி ராமேஸ்வரத்தில் 600 குடும்பங்களுக்கு மேல் இருக்கின்றன. எனவே, தமிழகத்தில் உள்ள கோயில்களில் தீர்த்தக் கிணறுகளை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்துவரும் பக்தர்களும் பாக்கியம் அடைவர்.

தமிழகத்தில் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இந்நிலையில் பள்ளிக் குழந்தைகள் செல்ல வசதியாக அரசு பேருந்துகளை அதிகளவில் இயக்க வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம். 1956-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதிதான் இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் நவம்பர் 1-ஆம் தேதி தமிழ்நாட்டு நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி `தமிழ்நாடு` என அன்றைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த இன்றைய முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து போட்டிருந்தார். இந்த ஆண்டு ஏன் அதை மாற்ற வேண்டும். நவம்பர் 1-ஆம் தேதிதான் தமிழ்நாட்டு நாளாக இருக்க வேண்டும்.

இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் 1.10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்திருக்கிறார்கள். எனவேம் தமிழக அரசின் வீடுதேடிக் கல்வி திட்டம் வரவேற்கத்தக்க விஷயம்.  2020 காலாண்டையும் 2021 காலாண்டையும் கணக்கிடுகையில் இறக்குமதி பெட்ரோலின் அளவு நாட்டில் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு தமிழக அரசுக்கு பெட்ரோல் மூலம் 19 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. இதைப்போல் மத்திய அரசுக்கும் வருவாய் வந்துள்ளது. பெட்ரோலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவதன் மூலம்தான் விலை உயர்வுப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு ஏற்படுத்த முடியும்.

கன்னியாகுமரியில் ரூ.48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை பொன் ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராக கொண்டு வந்தார். அவர் கொண்டுவந்த திட்டங்களை எல்லாம் மாநில அரசு செய்தாலே கன்னியாகுமரி மாவட்டம் அடுத்த கட்டத்துக்கு முன்னேறி சென்றுவிடும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடம் கையகப்படுத்துவதில் காலதாமதம் இருந்தது. அங்கு 150 மெடிக்கல் சீட் மத்திய அரசு கொண்டு வருவதாகச் சொன்னது. ஆனால், மாநில அரசுதான் வேண்டாம் என்கிறது. தமிழ்நாட்டுக்கு நல்லது நடக்கிறது என்றால் அதை அரசியல் ஆக்கக் கூடாது.

இந்தியாவில் 2000 ஆண்டுகளாக தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்கப்பட்டு வருகின்றன. தற்போது அதை ஏன் தடுக்க வேண்டும். பண்டிகை என்பது நம் பாரம்பரியம், கலாச்சாரம் ஆகும். எனவே மக்கள் தைரியமாக பட்டாசுகளை வாங்கி வெடிக்க வேண்டும். பட்டாசு தொழிலை நம்பி எட்டரை லட்சம் தொழிலாளர்கள் உள்ளார்கள். எனவே, இதை அவர்களுடைய வாழ்வாதாரமாகப் பார்க்கவேண்டும். பாஜகவைச் சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் எழுதினால் குண்டர் சட்டத்தைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், பெண் நிர்வாகிகள் பற்றிப் பதிவுபோட்ட திமுக பிரமுகர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இதுகுறித்துத் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்க இருக்கிறோம்” என்று அண்ணாமலை தெரிவித்தார்.

click me!