தமிழ்நாடு தினம்.. அதிமுக நவம்பர் 1-ன்னுசொல்லுச்சு.. திமுக ஜூலை 18-ன்னு சொல்லுது.. ஜி.கே.வாசனின் அதிரடி யோசனை!

By Asianet TamilFirst Published Oct 31, 2021, 7:45 PM IST
Highlights

தமிழ்ப் புத்தாண்டு நாள் விவகாரத்திலும் தை, சித்திரை எனக் கருத்து வேறுபாடு உள்ளது. இந்த விவகாரங்களில் எல்லாம் தமிழ் உணர்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள், சில அரசியல் கட்சிகள் பல கருத்துகளைக் கூறிக் கொண்டிருக்கின்றன.

தமிழ்நாடு தினம் விவகாரங்களில் அனைத்துத் தரப்பினரிடமும் ஒத்தக் கருத்தை ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன்ம் திருச்சியில் மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்ம் “கல்வி என்பது மாணவர்களின் எதிர்காலத்துக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியம். அந்த வகையில், கல்வியை நல்வழியில் கற்பிப்பது அவசியம். எனவே, அரசின் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் அரசியல் சாயம் பூசத் தேவை இல்லை.

கடந்த 1956-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதிதான் மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. முந்தைய அதிமுக அரசு அந்த நாளைதான் தமிழ்நாடு தினமாக அறிவித்தது. ஆனால், திமுக அரசு ஜூலை 18-ஆம் தேதியை அறிவித்துள்ளது. இதேபோல், தமிழ்ப் புத்தாண்டு நாள் விவகாரத்திலும் தை, சித்திரை எனக் கருத்து வேறுபாடு உள்ளது. இந்த விவகாரங்களில் எல்லாம் தமிழ் உணர்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள், சில அரசியல் கட்சிகள் பல கருத்துகளைக் கூறிக் கொண்டிருக்கின்றன. இந்த விவகாரங்களில் அனைத்துத் தரப்பினரிடமும் ஒத்தக் கருத்தை ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை.

கொரோனா பெருந்தொற்றே இன்னும் முடியவில்லை. அதற்குள்  டெங்கு, மலேரியா போன்ற நோய்களும் பரவி வருகின்றன. இதுபோன்ற ஒரு சூழலில் தமிழகத்தில் டாஸ்மாக் பார்களை திறப்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. எனவே, டாஸ்மாக் பார்களைத் திறக்கும் முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழகத்தில் வேளாண் மண்டலமாக அறிக்கப்பட்டுள்ள காவிரி டெல்டா பகுதியில், இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் சென்னை பெட்ரோ கெமிக்கல் நிறுவனம் ஆகியவை இணைந்து ரூ.31,000 கோடியில் 90 லட்சம் டன் திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையம் அமைத்து வருகின்றன. இதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.

ஏனெனில், இதுபோன்ற திட்டங்கள் எதுவும் விவசாயப் பகுதியில் உகந்தது அல்ல. இதனால் லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாழாகும் அபாயம் உள்ளது. மேலும் இது சுற்றுச்சூழலையும் பாதிக்கும். எனவே, இந்தத் திட்டத்தை நிறைவேற்ற அளித்த ஒப்பந்தப் புள்ளியை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின்  உரிமைகளை எக்காரணம் கொண்டும் அரசு விட்டுக் கொடுக்க கூடாது. அணை திறக்கப்பட்டு தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்படுவது விவசாயிகள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவது தமிழக அரசின் கடமை ஆகும்.

மழைக் காலம் தொடங்கிவிட்டது. எனவே, மழையால் பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசின் நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதத்தை நீக்கக்கூடிய கருவிகளை அரசு நிறுவ வேண்டும். உரத் தட்டுப்பாட்டைக் களைய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் காஸ் விலை உயர்வு சாமானிய, ஏழை, எளிய மக்கள் உட்பட எல்லாத் தரப்பு மக்களையும் பாதித்து வருகிறது. இந்த விஷயத்தில் மத்திய - மாநில அரசுகள் இணைந்து பெட்ரோலியப் பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, மத்திய அரசு இதில் தீவிர கவனம் செலுத்தி மக்களின் சுமையைக் குறைக்க வேண்டும்.” என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
 

click me!