திமுக அரசோடு மோத நினைக்கிறீங்களா..? தமிழக ஆளுநருக்கு மெசேஜ் சொன்ன திமுக கூட்டணி கட்சி..!

By Asianet TamilFirst Published Oct 31, 2021, 6:59 PM IST
Highlights

தமிழ்நாடு ஒருமுகமாக நின்று, எதிர்ப்புத் தெரிவிக்கும் தேசியக் கல்விக் கொள்கையை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியிருப்பது எதிர்மறை போக்காகும். இது மக்கள் தேர்ந்தெடுத்த அரசின் கொள்கை வகுக்கும் செயல்பாட்டில் குறுக்கிடுவதாகும்.
 

ஆளுநர் மாளிகைக்கு மாநில அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் எண்ணம் இருந்தால் அது உடனடியாக கைவிடப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளருமான முத்தரசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அரசு திட்டங்களின் செயல்பாடுகளை அறிந்துகொள்ளும் வகையில், துறை செயலாளர்களுடன் ஆளுநர் ரவி ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அது உண்மைதான் என்று கூறும் வகையில், தரவுகளுடன் தயாராக இருக்கும்படி துறைச் செயலாளர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதிய நகல் சமூக ஊடகங்களில் வெளியானது சர்ச்சையானது. இதனையத்து தமிழக ஆளுநருக்கு திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், இந்த விஷயத்தில் திமுக அரசு அமைதியாகவே உள்ளது. 

இந்நிலையில் தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆளுநரும் வேந்தருமான ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஆலோசனையில் பல்கலைக்கழகங்களில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும்படி ஆளுநர் வலியுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கு திமுக கூட்டணி கட்சியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளருமான முத்தரசன் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.  

அதில், “தமிழ்நாட்டின் புதிய ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள ஆர்.என்.ரவி நேற்று (30.10.2021) பல்கலைக்கழக துணை வேந்தர்களின் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார். வேந்தர், துணை வேந்தர்களை அழைத்துப் பேசுவது வழக்கமான ஒன்று. எனினும் தமிழ்நாடு ஒருமுகமாக நின்று, எதிர்ப்புத் தெரிவிக்கும் தேசியக் கல்விக் கொள்கையை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியிருப்பது எதிர்மறை போக்காகும். இது மக்கள் தேர்ந்தெடுத்த அரசின் கொள்கை வகுக்கும் செயல்பாட்டில் குறுக்கிடுவதாகும்.

தமிழ்நாட்டின் தனித்துவத்தை கருத்தில் கொண்டு, கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என முதல்வர் மக்களுக்கு உறுதி அளித்துள்ள நிலையில், மக்கள் உணர்வுக்கு எதிராக ஆளுநர் தேசியக் கல்விக் கொள்கையை குறுக்கு வழியில் அமல்படுத்த முயற்சிப்பது அமைதியை பாதிக்கும் செயலாகும். ஆளுநர் மாளிகைக்கு மாநில அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் எண்ணம் இருந்தால் அது உடனடியாக கைவிடப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம். தமிழ்நாடு அரசின் உயர் கல்வித் துறையுடன் இசைவாக செல்லும் இணக்கமான வழிமுறையை ஆளுநர் பின்பற்ற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.” என்று அறிக்கையில் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
 

tags
click me!