
கர்நாடக சட்டப் பேரவையில் இதுவரை 193 எம்எல்ஏக்கள் மட்டுமே பதவியேற்றுள்ள நிலையில், முதலமைச்சர் எடியூரப்பா தப்புவாரா ? அவர் தப்பிக்க என்னென்ன வழிகள் உள்ளன? தற்காலிக சபாநாயகர் போபையா, எடியூரப்பாவைக் காப்பாற்ற என்ன திட்டம் வைத்திருக்கிறார்? என்பன போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 104 இடங்களில் ஜெயித்த பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.
மேலும் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள்கள் அவகாசத்தை ஆளுநர் அளித்திருந்தார். ஆனால், பேரவையில் எடியூரப்பா, உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.
தற்காலிக சபாநாயகர் இதற்கான வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்றும், வாக்கெடுப்பு முறை குறித்து தற்காலிக சபாநாயகர் தீர்மானிப்பார் என்று நீதிபதி சிக்ரி கூறினார்.
இதையடுத்து, இன்று காலை 11 மணிக்கு சட்டப்பேரவை கூடியதும், புதிய எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்று வருகின்றனர். தற்காலிக சபாநாயகர் போப்பையா பதவிப் பிரமாணம் செய்து செய்து வைத்தார்ப.
இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இன்று எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்புக்கு பின்பு, மாலை 4 மணிக்கு சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. 112 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே எடியூரப்பா அரசு தப்பும். பாஜகவுக்கு 104 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ள நிலையில், எடியூரப்பாவை காப்பாற்ற ஒரு சில வாய்ப்புகள் மட்டுமே உள்ளன.
காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.,க்களில் இருந்து 8 பேர் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும். அல்லது 15 எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு வராமல் தவிர்த்துவிட்டாலும் எடியூரப்பா அரசுக்கான ஆபத்து நீங்கும்.
காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.,க்கள் 7 பேர் அணி மாறி வாக்களித்தால் எடியூரப்பா அரசு தப்பிவிடும்.
காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏ.,க்கள் 14 பேர் பதவியேற்காமல் தவிர்த்துவிட்டால், அவையின் பலம் 207 ஆக குறைந்து விடும்.
எதிர்கட்சியினர் 14 பேர் பதவியேற்கவில்லை என்றால் 104 எம்.எல்.ஏக்களுடன் பாஜக பெரும்பான்மை பலம் பெற்றுவிடும்.
எதிர்கட்சியினர் 14 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்காவிட்டாலும், பாஜக பெரும்பான்மை பலத்தை நிரூபித்துவிடும்.
ஆனால் இப்படி இந்த மேற்கண்ட வாய்ப்புகளிலும் சம்மந்தப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் 6 ஆண்டுகளுக்கு தகுதியிழப்பு செய்யப்படுவார்கள்.
2011-ஆம் ஆண்டில் சபாநாயகராக இருந்த போப்பையா, எடியூரப்பாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 11 எம்.எல்.ஏ.,க்களை தகுதிநீக்கம் செய்ததன் மூலம் ஆட்சியைக் காப்பாற்றியவர், இந்த முறை என்ன திட்டத்தை செயல்படுத்த உள்ளார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.