
சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாக தி.மு.க.வின் எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு உசுப்பி விட்டிருப்பதால் தமிழக அரசு சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை நடத்தும் பிஸியில் இறங்கிவிட்டது. ஜெயலலிதா முன்பாக வெள்ளை குதிரை பறந்தது போல் இந்த முறை எது பறக்கப்போகிறதோ?! என்று அதிர்ச்சியில் இருக்கிறார்கள் தொழில்துறை அதிகாரிகள்.
கடந்த தி.மு.க. ஆட்சியில் பள்ளி கல்வி துறையில் தடம் பதித்தவர் தங்கம் தென்னரசு. தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கும் இவர், நேற்று சட்டசபையில் “தமிழக அரசு 2017ல் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தவில்லை. பின் 2017-2018 பட்ஜெட்டில், முதலீட்டாளர் மாநாட்டை நடத்த 75 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.
நிதியாண்டு முடிய இன்னும் இரு மாதங்களே உள்ளன. அந்த தொகையை ஒதுக்கிவிட்டதா? கவர்னர் உரையில் இது பற்றி விளக்கமே இல்லையே!’ என்று கேட்டார்.
உடனே தமிழக தொழில்துறை அமைச்சர் சம்பத் எழுந்து “முதலீட்டாளர் மாநாடு நடத்துவதற்காக ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது. வரும் செப்டம்பருக்குள் மாநாடு நடப்பது உறுதி.” என்றார்.
அமைச்சரின் இந்த பதில்தான் அதிகாரிகளை அதிரவைத்துள்ளது.
அதாவது ஜெயலலிதா இருக்கும் போது சர்வதேச முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டது. அப்போது லேசரில் உருவாக்கப்பட்ட வெள்ளை குதிரை நடந்து வந்து அவரை வணங்குவது போல் வடிவமைத்தனர். குதிரை நடனத்தில் ஜெ., பெரிதும் மகிழ்ந்தாலும் கூட அந்த மாநாட்டால் தமிழகத்துக்கு எந்த பெரிய பலனும் கிடைத்துவிடவில்லை என்று எதிர்கட்சிகள் பொருளாதார நுணுக்கங்களுடன் விமர்சித்தன.
இந்நிலையில் ஜெ., மறைந்துவிட்டாலும் அவரது கெத்தோடு ஆட்சி நடத்தப்படும் இந்த காலத்தில் மீண்டும் அந்த மாநாடு நடைபெற இருக்கிறது. போன தடவை குதிரை பறந்தது, ஆனால் இந்த முறை பறக்கப்போவது என்னவோ?
ஆட்சி நிர்வாகம் பல மாதங்களாக திறம்பட நடக்கவில்லை எனும் சூழல் உள்ளது. இச்சூழலில் சர்வதேச முதலீட்டாளரை ஈர்க்கும் வண்ணம், அவர்கள் மாநாட்டில் கேட்கும் கேள்விகளுக்கும், எழுப்பும் சந்தேகங்களுக்கும் தீர்வு சொல்லும் வண்ணம் அடிப்படை கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியம்.
அப்படியில்லையென்றால் சர்வதேச முதலீட்டாளர் மத்தியில் இந்த முறை குதிரை பறக்காது! நம் மானமல்லவா பறந்துவிடும்!” என்று ஷாக்கடித்துக் கிடக்கின்றனர்.