
சட்டமன்றத்தில் ’தனி ஒருவனாக’ தினகரன் தடாலடி செய்து கொண்டிருக்கிறார். ஜெயலலிதா இல்லாதா சட்டசபையில் எந்த தயக்கமுமில்லாமல் எகிறி குதித்த அ.தி.மு.க.வின் அமைச்சர் பெருமக்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தினகரன் வருகைக்கு பின் கப்சிப் கந்தசாமிகளாக மாறியிருக்கின்றனர்.
சொல்லப்போனால் ஜெயலலிதா இருந்தால் எப்படி இருப்பார்களோ கிட்டத்தட்ட அதேபோன்ற கமுக்க நிலையைதான் கையில் எடுத்திருக்கிறார்கள் அ.தி.மு.க. உறுப்பினர்கள் என்று பேசப்படுகிறது.
இந்நிலையில் விரைவில் சசிகலாவை பரப்பன அக்ரஹார சிறையில் சந்திக்கும் தினகரன் சில முக்கிய முடிவுகள் பற்றி பேச இருக்கிறாராம். கூடவே சில முக்கிய முடிவுகளை எடுக்கவும் இருக்கிறாராம்.
அவையாவன “தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பதினெட்டு பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் கோர்ட்டில் வழக்காக இருக்கிறது. சென்னை உயர்நீதி மன்றத்தில் இருக்கும் இந்த வழக்கின் வாதங்கள் முடிந்து எந்த சூழலிலும் தீர்ப்பு வரலாம். அந்த தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்தால் பதினெட்டு பேரோடு தன்னையும் சேர்த்து பத்தொன்பது பேராக்கி, தி.மு.க. மூலம் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மாணம் கொண்டு வர முயற்சி எடுப்பது குறித்து சசியிடம் ஆலோசிப்பார். அதே வேளையில் ஒரு வேளை தீர்ப்பு பாதகமாக வந்தால் அதை சுப்ரீம் கோர்ட்டுக்கு மேல் முறையீடுக்கு கொண்டு செல்வது குறித்தும் விவாதிப்பார் என்று தெரிகிறது.
தீர்ப்பு சாதகமாக வந்தால், ஆட்சியை கலைப்பதற்கான மூவ்களில் இறங்கும் புலிப்பாதையை தேர்ந்தெடுக்க அனுமதி கேட்பார். அல்லது மேல்முறையீடுக்கு செல்லும் முடிவை எடுத்து அரசியலில் அமைதி காப்பார் என்கிறார்கள்.
ஆக மொத்தத்தில் சசியின் முன்னிலையில்தான் தினகரன் இந்தப் பாதையா அல்லது அந்தப் பாதையா என டாஸ் போட்டுப் பார்ப்பார்.” என்கிறார்கள்.
பார்த்து தல, காயினை தூக்கி போடுறப்ப ஜெயிலர் பாக்கெட்ல வுழுந்துட போவுது!