
எப்படியொரு பெருமை வாய்ந்த அரசாங்கத்தில் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்! என்பதை சர்வ தேசத்துக்கும் தெரிவிக்கும் காட்சி ஒன்று சென்னையில் நிகழ்ந்திருக்கிறது. இதன் சாட்சியான புகைப்படம் ஒன்று வாட்ஸ் ஆப்பில் வைரலாக வைரலாக எட்டு திசையும் காரி துப்பாத குறைதான்! என்று தலையிலடிக்கிறார்கள் இணையதள விமர்சகர்கள்.
அப்படி என்னவாயிற்று?
கடந்த நான்கைந்து நாட்களாக தொடரும் போக்குவரத்து தொழிலாளர் ஸ்டிரைக்கினால் தமிழக மக்கள் நாய்படாத பாடு படுகிறார்கள். இந்த இக்கட்டான நிலையை பயன்படுத்தி தனியார் பேருந்துகள் தாறுமாறாக கட்டணத்தை ஏற்றி மக்களை நோகடிக்கின்றன. இதற்கு பயந்து அரசு பேருந்தில் ஏறினால், அனுபவமில்லாத டிரைவர்கள் எமன் பயத்தை காட்டுகிறார்கள். கட்டண கொள்ளைக்கும், பேருந்து விபத்துக்களுக்கும் பஞ்சமே இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்றன தமிழக நாட்கள்.
இந்நிலையில் தற்போது வாட்ஸ்அப்பில் போட்டோவுடன் தகவலொன்று பரவிக் கொண்டிருக்கிறது. கடல் தாண்டியும், நாடுகள் தாண்டியும் சமூக வலைதளங்கள் வழியாகவும் பரவும் இந்த செய்தியை பார்த்து தலையிலடிக்கிறார்கள் சர்வதேச தமிழ் மக்கள்.
அப்படி அந்த போட்டோவில் என்ன இருக்கிறது?...
சென்னையில் பேருந்து கிடைக்காத காரணத்தால் பெருநகர சென்னை மாநகராட்சியின் தெருநாய் வண்டியில் மக்களை ஏற்றிச் சென்றிருக்கிறார்கள். இது போட்டோ எடுக்கப்பட்டு பகிரப்பட்டிருக்கிறது. அத வண்டியில் ஆண்களும், பெண்களுமாக ஏறும் அத்தனை பேரும் ஏழை மக்களாக இருக்கிறார்கள்.
அரும்பாகத்தில் இருந்து கோயம்பேடு வரை மக்களை இப்படி அழைத்துச் சென்றதாக தகவல் பரவி தலையிலடிக்க வைத்திருக்கிறது!