
விர்ச்சுவல் அடையாள அட்டை பெற, மார்ச் 1 ஆம் தேதி முதல் UIDAI இணையதளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. விர்ச்சுவல் எண்ணை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம் என்றும், ஜூன் 1 ஆம் தேதி முதல் இந்த திட்டம் முழுமையாக அமலுக்கு வர உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
விர்ச்சுவல் அடையாள அட்டை மூலம் ஆதாரில் பதிவு செய்துள்ள முழு விவரங்கள் ரகசியம் வெளியாகக் கூடும் என்ற அச்சம் எழாது. ஆதார் எண் பதிவு செய்தவர்கள், தேவை ஏற்பட்டால், இணையதளத்தில் இருந்து குறைந்த தகவல்களுடன் கூடிய விர்ச்சுவல் அடையாள அட்டையை தாங்களே உருவாக்கிக் கொள்ள முடியும் என்றும் செய்தி வெளியாகி உள்ளது.
மொபைல்போன் சிம்கார்டு உள்ளிட்டவற்றிற்கு, இந்த விர்ச்சுவல் அடையாள அட்டையைப் பயன்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. விர்ச்சுவல் எண்ணை பயன்படுத்துவது குறித்த முழுமையான தகவல் விரைவில் வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், விர்ச்சுவல் ஐடி குறித்து, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம், தனது டுவிட்டர் பக்கத்தில்
கருத்தொன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள், மத்திய அரசு கொடுத்த நிர்ப்பந்தம் காரணமாக தங்கள் ஆதார் விவரங்களை, பல்வேறு நிறுவனங்களுடன் ஏற்கனவே பகிர்ந்து கொண்டு விட்டனர்.
தற்போது ஆதார் விவரங்களை பாதுகாப்பதற்காக விர்ச்சுவல் அடையாள அட்டையை கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இது குதிரை களவு போன பின்பு லாயத்தைப் பூட்டுவது போன்ற நடவடிக்கை என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். மேலும், காலம் தாழ்ந்த இந்த நடவடிக்கையால் என்ன ஏற்படும்? என்று சிதம்பரம் கேள்வியெழுப்பு உள்ளார்.