
விபத்து இழப்பீடுகள் தொடரப்படுவதற்கான காரணம் உங்கள் ஓட்டுநர்கள்தானே என நீதிமன்றம் கேள்வி எழுப்பியதற்கு ஓட்டை பேருந்துகளை கொடுத்தால் எப்படி ஓட்டுவது என தொழிற்சங்கங்கள் பதில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
போக்குவரத்து ஊழியர்களுக்கு 2.57 மடங்கு ஊதிய உயர்வு, பிடித்தம் செய்த நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் தொடர்ச்சியாக 8வது நாளாக இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக தொழிற்சங்கங்கள் சார்பில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதை ஏற்றுக்கொண்டால், பணிக்கு திரும்ப தயார் என தொழிற்சங்கங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளன.
அந்த மனுவில், அரசு வழங்கிய 2.44 மடங்கு ஊதிய உயர்வை இடைக்கால நிவாரணமாக ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் கேட்பதற்கும், அரசு கூறுவதற்கும் இடையேயான 0.13 மடங்கு வித்தியாசம் தொடர்பாக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியை நடுவராக நியமித்து தொழிற்சங்கங்கள் மற்றும் அரசுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். ஊதிய உயர்வு தொடர்பாக, அந்த நடுவர் மூன்று மாத காலத்திற்குள் உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என தொமுச சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நடுவராக நியமிக்க வேண்டும் என்ற தொழிற்சங்கங்களின் நிபந்தனையை ஏற்றுக்கொள்வதாக அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. மேலும் பேச்சுவார்த்தைக்கு தயார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழக அரசால் நியமிக்கப்பட்ட தற்காலிக ஓட்டுநர்களால் விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் இருக்கிறது.
இந்நிலையில் இன்று விபத்துகள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு ஓட்டை பேருந்துகளை கொடுத்தால் எப்படி ஓட்டுவது என தொழிற்சங்கங்கள் கேள்வி எழுப்பின.