பெண்கள் மேடைக்கு வரக்கூடாது..!! இந்த காலத்தில் இப்படி ஒரு இசுலாமிய அமைப்பா.? கொந்தளிக்கும் ஆளுநர்.

By Ezhilarasan BabuFirst Published May 13, 2022, 1:44 PM IST
Highlights

கேரள மாநிலத்தில் மாணவியை மேடைக்கு அழைக்க கூடாது என இஸ்லாமிய அமைப்பு எதிர்ப்பு தெரிவித்த சம்பவத்தை அம்மாநில ஆளுநர் முகமது ஆரிப் கான் கண்டித்துள்ளார். 

கேரள மாநிலத்தில் மாணவியை மேடைக்கு அழைக்க கூடாது என இஸ்லாமிய அமைப்பு எதிர்ப்பு தெரிவித்த சம்பவத்தை அம்மாநில ஆளுநர் முகமது ஆரிப் கான் கண்டித்துள்ளார். இதுபோன்ற நிகழ்வுகள் தான் இஸ்லாமோஃபோபியா பரவ காரணமாக இருக்கிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார். இச்சம்பவத்திற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மதவாதம் என்பது பிற்போக்குத்தனம், பழமைவாதம் நிறைந்ததாகவே உள்ளது. இதற்கு மத பாகுபாடு இல்லை, அந்த வகையில் சில அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகளின் செயல்பாடுகள் பிற்போக்குத்தனம் நிறைந்ததாகவே உள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாது. பெண்கள் முகத்தை மூடிக் கொள்ள வேண்டும் ஆண்கள் இருக்கும் இடத்திற்கு பெண்கள் வரக்கூடாது, ஆண்கள் இருக்கும் மேடைகளில் பெண்கள் ஏறக்கூடாது போன்ற எண்ணற்ற பழமைவாதங்கள் மண்டிக் கிடக்கிறது. இதை நிரூபிக்கும் வகையில் கேரளாவில் மீண்டுமொரு சம்பவம் நடந்துள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் பெரிந்தழ்மண்ணபகுதியில் மதரஸா ஆண்டு விழா நடைபெற்றது. அதற்கு புதிய கட்டிடம் திறப்பு விழா நடந்தது. அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழா மேடையில் மதத் தலைவர்கள் கூடியிருந்தனர்.

அப்போது அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. அந்த வகையில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவன் அழைக்கப்பட்டான், அந்த மாணவன் வந்து வந்து பரிசு பெற்றுச் சென்றான். அதற்கடுத்து மாணவியின் பெயர் மஸீதா பிவியின் பெயர் அழைக்கப்பட்டது மாணவியின் பரிசு வாங்க மேடைக்கு வந்தார் அப்போது மேடையில் நின்றிருந்த சமஸ்தா என்ற இஸ்லாமிய அமைப்பின் துணைத் தலைவர், மாணவியை மேடைக்கு வர எதிர்ப்பு தெரிவித்ததுடன் மாணவியை மேடைக்கு அழைத்தது யார்? சமஸ்தாவின் தீர்மானம் என்னவென்று தெரியுமா? என ஆவேசம் தெரிவித்தார். பெண்களின் பாதுகாவலர்களை பரிசு வாங்க மேடைக்கு கூப்பிடுங்கள் என்றார், இதனால் மேடைக்கு வந்த மாணவி திருப்பி அனுப்பப்பட்டார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இது தொடர்பாக பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கேரள மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் ஆர். பிந்து பெண் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குகின்றனர் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் தான் நாம்முடைய அணுகுமுறை இருக்க வேண்டும். இஸ்லாமிய பெண்கள் கல்வியில் நன்கு முன்னேறி வருகின்றனர் இது பெண்களின் காலம் என்றார். மேலும் கருத்து தெரிவித்துள்ள  காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் வி.டி சதீஷன், சிபிஐ முன்னாள் அமைச்சர் கே.டி ஜலில் உள்ளிட்டோர் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் மேடையில் மாணவி அவமதிக்கப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒருவரின் அங்கீகாரத்திற்கான மரியாதையை அவர்கள் தான் பெற்றுக்கொள்ள வேண்டும் அவர் சார்பில் வேறொருவர் பரிசு வாங்குவது சரியல்ல என அவர்  இஸ்லாமிய அமைப்பு கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் பெண் குழந்தை மேடைக்கு அழைக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ளார் இதற்கு எதிர்வினை யாற்றாதவர்கள், கண்டனமும் தெரிவிக்காது மௌனமாக இருக்கது வெட்கக்கேடானது. இதற்கு எதிர்வினை ஆற்றாத அரசியல் தலைவர்களை எண்ணி அவமானப் படுகிறேன். ஆண் பெண் சமத்துவமின்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் கேரள சமூகத்தின் அமைதி மிகவும் வேதனைக்குரியது. பெண்களை வீட்டில் நான்கு சுவருக்குள் முடக்கும் மதத் தலைவர்களின் முயற்சி வெட்கக்கேடானது. பெண்களை இப்படித்தான் நடத்த வேண்டும் என குர்ஆனோ அதன் சட்டமும் கூறவில்லை. அவ்வாறு இருக்கும்போது பொதுமேடையில் மாணவி அவமரியாதை செய்யப்பட்ட சம்பவம்  குற்றச் சம்பவமாகும். இந்த விவகாரத்தில் மாநில காவல்துறை தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் இதுபோன்ற சம்பவங்களால் தான் இஸ்லாமிய போபியோ பரவ காரணமாக இருக்கின்றன என அவர் கண்டித்துள்ளார். 

click me!