மாட்டு கறி பிரியாணியில் தீண்டாமை.? திருப்பத்தூர் கலெக்டருக்கு தேவையா இது.? அலறவிடும் SC-ST ஆணையம்.

By Ezhilarasan BabuFirst Published May 13, 2022, 12:45 PM IST
Highlights

மாட்டுக்கறி பிரியாணிக்கு தடை விதிப்பதன் மூலம் நவீன தீண்டாமை கடைபிடிக்கப்பட்டதா என விளக்கம் கேட்டு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மாட்டுக்கறி பிரியாணிக்கு தடை விதிப்பதன் மூலம் நவீன தீண்டாமை கடைபிடிக்கப்பட்டதா என விளக்கம் கேட்டு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாட்டுக்கறி பிரியாணி புறக்கணிப்பு தீண்டாமையின் செயலாக தெரிவதாகவும் ஆணையம் சந்தேகம் எழுப்பியுள்ளது. இது திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

மாட்டிறைச்சி என்பது ஒரு காலத்தில் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் விரும்பி உண்ணும் உணவாக இருந்தது. ஆனால் தற்போது அது அனைத்து தரப்பினராலும் விரும்பி உண்ணும் உணவாக மாறியுள்ளது. ஆனாலும் மாட்டிறைச்சி என்பது  தலித் மற்றும் இஸ்லாமிய மக்களின் உணவாகவே அடையாளப்படுத்தப்படுகிறது.  இந்நிலையில்தான் மாட்டிறைச்சிக்கு தடை வந்தபோது இஸ்லாமிய தலித் அமைப்புகள் மற்றும் திராவிட இயக்கங்கள் அதை கடுமையாக எதிர்த்தன. ஆங்காங்கே இலவசமாக மாட்டுக்கறி பிரியாணிகள் மக்களுக்கு வழங்கப்பட்டது. இப்படிபட்ட போராட்டப் பின்னணி வரலாறு தமிழ்நாட்டுக்கு உள்ளது. இத்தனை இருந்தும் இஸ்லாமிய மக்கள் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான வசிக்கும் பகுதியான திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணிக்கு தடை விதிக்கப்பட்டது.

இது தலித் இஸ்லாமிய மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதாவது ஆம்பூர் வர்த்தக மையத்தில்  வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் பிரியாணி திருவிழா நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அதில் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, முயல் பிரியாணி போன்றவை மட்டுமே விற்கப்படும் என்றும் மாட்டுக்கறி பிரியாணிக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மாவட்ட நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு நவீன தீண்டாமையின் வெளிப்பாடாக இருக்கிறது என்றும், கட்டாயம் பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணி இடம்பெற வேண்டும் இல்லை என்றால் நாங்கள் இலவசமாக பிரியாணி திருவிழா அரங்கத்திற்கு வெளியில் மாட்டுக்கறி பிரியாணி வழங்குவோம் என மேற்கண்ட இயக்கங்கள் அறிவித்தன. இது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

இதே போல் மற்றொரு புறம் இந்து அமைப்புகளை  பிரியாணி திருவிழாவையே நடத்தக்கூடாது என போராட்டத்தில் இறங்கின. ஒருமைப்பாட்டுக்காக என்ற பெயரில் நடத்தப்படும் பிரியாணி திருவிழாவிற்கு இத்தனை எதிர்ப்புகளா என அஞ்சிய மாவட்ட நிர்வாகம், இந்த திருவிழாவையே ஓத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. தொடர் மழை காரணமாக பிரியாணி திருவிழாவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாட்டிறைச்சி பிரியாணி புறக்கணிப்பு தீண்டாமை செயலாக தெரிவதாகவும் கேள்வி எழுப்பியுள்ள ஆணையம் இதற்கு விளக்கம் அளிக்க கேட்டுக்கொண்டுள்ளது. 

சுமார் 2 லட்சம் இஸ்லாமியர்கள் வசிக்கக்கூடிய பகுதியில் மாட்டிறைச்சி பிரியாணிக்கு அனுமதி வழங்கப்படாதது வகுப்புவாத அடிப்படையில் நாங்கள் ஏன் பாகுபாடாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும், ஒருவேளை இதில் தீண்டாமை கடைபிடிக்கவில்லை என்றால் அதற்குரிய விளக்கம் அளிக்கவும் ஆணையம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது.
 

click me!