தெறிக்கவிடும் திமுக.. உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியிலிருந்து கழன்றுகொள்கிறதா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்.?

By Asianet TamilFirst Published Sep 22, 2021, 9:39 AM IST
Highlights

 நெல்லையில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் தனித்து போட்டியிட போவதாக திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிரடியாக அறிவித்துள்ளது.
 

உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி என்றால், கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சியோடு பேச்சுவார்த்தை நடத்தி, எத்தனை சதவீத தொகுதியில் கட்சிகள் போட்டி என்பதை அறிவிப்பார்கள். ஆனால், 9 மாவட்டங்களில் மட்டுமே ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதால், கூட்டணியில் உள்ள கட்சிகள் எத்தனை சதவீதம் இடங்களில் போட்டி என்பது இன்று வரை வெளிப்படையாக திமுக, அதிமுக கூட்டணிகள் அறிவிக்கவில்லை. பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே அதிமுக கூட்டணி வேட்பாளர் பட்டியலை வெளியிட தொடங்கியதால், பாஜக அதிர்ச்சி அடைந்தது.
இதேபோல திமுக கூட்டணியிலும் கட்சிகள் போட்டியிடும் இடங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. கூட்டணி கட்சிகளுக்கு மிகவும் குறைவான இடங்களையே ஒதுக்கி திமுக அதிர்ச்சி கொடுத்து வருகிறது. மேலும் கூட்டணி கட்சிகள் கேட்கும் இடங்களையும் தராமல், அவர்கள் சொல்லும் இடத்தில் போட்டியிட சொல்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதனால், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிருப்தியில் உள்ளன. இதற்கு நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதே உதாரணம். 
 நெல்லையில் உள்ள ஒன்பது ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. இங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் ஓரிடம்கூட ஒதுக்கப்படவில்லை. அந்த இடங்களைத் தவிர்த்து ஒதுக்கிய இடங்களும் அவர்கள் கேட்காத பகுதிகளாகும். வழக்கமாக எந்தக் கூட்டணியிலும் கம்யூனிஸ்ட் போட்டியிடும் அம்பாசமுத்திரம், ராமையன்பட்டி போன்ற இடங்களில் திமுகவே போட்டியிடுகிறது. தங்களிடம் கலந்து பேசாமல் வேட்பாளர் பட்டியலையும் திமுக வெளியிட்டதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் அதிருப்தி அடைந்துள்ளது.
இதனால், அக்கட்சி வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் தனித்து களம் காணப்போவதாக நெல்லையில் அறிவித்துள்ளது. இதேபோல தென் மாவட்டத்தில் செல்வாக்குள்ள காங்கிரஸ் கட்சிக்கு நெல்லையில் கேட்ட இடங்களை திமுக ஒதுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. 
 

click me!