ராஜ்ய சபா தேர்தல்.. புதுச்சேரியில் வலுவாக கால் பதிக்கும் பாஜக.. முதல்வர் ரங்கசாமியை வழிக்கு கொண்டு வந்த பாஜக.!

By Asianet TamilFirst Published Sep 22, 2021, 8:58 AM IST
Highlights

புதுச்சேரியில் ஒரே இடத்துக்கான மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் விட்டுக்கொடுத்தது பற்றி பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளன.  
 

புதுச்சேரியில் அக்டோபர் 4 அன்று ஒரே ஒரு இடத்துக்கான மாநிலங்களவை எம்.பி. தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 22 அன்று நிறைவடைகிறது. புதுச்சேரியில் இத்தேர்தலில் யார் போட்டியிடுவது என்பதில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே போட்டாபோட்டி ஏற்பட்டது. பாஜகவுக்கு 6 எம்எல்ஏக்கள், சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ஆதரவு உள்ளதால், தாங்கள் நிறுத்தும் வேட்பாளருக்கு என்.ஆர்.காங்கிரஸ் ஆதரவு அளிக்க வேண்டும் என்று பாஜக தீர்மானம் நிறைவேற்றி முதல்வர் ரங்கசாமியிடம் வழங்கினர்.
சட்டப்பேரவையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 10 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால், தங்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவரை எம்.பி.யாக்க ரங்கசாமி விரும்பினார். ஆனால், இரு கட்சிகளும் இதில் விடாப்பிடியாக இருந்தன. இதுதொடர்பாக புதுச்சேரி பாஜகவினர் கட்சி மேலிடத்துடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வந்தனர். மேலும் பாஜக மேலிடமும் நேரடியாக ரங்கசாமியிடம் பேசி, அந்த இடத்தை பாஜகவுக்கு விட்டுத் தரும்படி தெரிவித்தன. பரபரப்பான காட்சிகளுக்கு இடையே முதல்வர் ரங்கசாமி, என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலரும் ஆளுநர் தமிழிசையைச் சந்தித்து பேசினார்கள். மாநிலங்களவை எம்.பி. தேர்தல் தொடர்பாகவே அப்போது பேசப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாயின.
இந்நிலையில் இறுதிகட்டமாக பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் இன்னொரு யோசனையை வைத்தது. அதாவது, 2015-இல் தன்னுடைய நண்பர் கோகுலகிருஷ்ணனை எம்.பி.யாக்க ரங்கசாமி விரும்பினார். ஆனால், அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலர் ஆதரவு தர மறுத்தார்கள். அதில் சிக்கல் ஏற்பட்டதால், அவரை அதிமுகவில் இணைத்து, அந்தக் கட்சி ஆதரவுடன் எம்.பி.யாக்கினார் ரங்கசாமி. அதுபோலவே தான் விரும்பும் நபரை பாஜகவில் இணைத்து எம்.பி.யாக்கலாம் என்றும் என்.ஆர். காங்கிரஸ் யோசனை தெரிவித்துள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டன.


ஆனால், அந்த யோசனையை பாஜ தலைமை உடனடியாக நிராகரித்தது. இதையடுத்து வேறு வழியில்லாமல் என்.ஆர். காங்கிரஸ், பாஜகவுக்கு அந்த இடத்தை விட்டுக்கொடுத்தது. ஆனால், அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் ரங்கசாமியைச் சந்தித்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும், பாஜக தலைமை விரும்புவதால், வேறு வழியில்லை என்று ரங்கசாமி கட்சி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இழுபறி நீடித்துவந்த நிலையில், சுமூகமாக முடிந்ததால், மாநிலங்களவை வேட்பாளராக செல்வகணபதி பாஜக மேலிடம் அறிவித்தது. 
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸுக்கு 10 எம்.எல்.ஏ.க்களும், பாஜகவுக்கு சுயேட்சைகள் 3 பேர் உள்பட 9 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. வேட்பு மனு தாக்கல் இன்று முடிவடைய உள்ள நிலையில். திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பில் யாரும் களம் காணாவிட்டால், பாஜக வேட்பாளர் வெல்வது உறுதியாகிவிடும். இதன்மூலம் புதுச்சேரியிலிருந்து முதன் முறையாக பாஜகவுக்கு மாநிலங்களவை எம்.பி. கிடைப்பார்.

click me!