முதல்வரின் ஒற்றை நடவடிக்கையால் எல்லாம் மாறப்போகுது... மார்த்தட்டும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

By Asianet TamilFirst Published Sep 21, 2021, 9:36 PM IST
Highlights

முதல்வரின் நடவடிக்கையால் எதிர்காலத்தில் அரசுப் பள்ளியில் சேர பெரிய சிபாரிசுகள் தேவை என்ற நிலை ஏற்பட உள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 

சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் நீட் தேர்வு அனுமதிக்கப்பட்டால், தமிழகத்தின் கல்வி வளர்ச்சி 75 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிடும் என்று நீதிபதி ஏ.கே.ராஜன் மிகத் தெளிவாகவே சொல்லியிருக்கிறார். அதனால்தான் தமிழக முதல்வர் நீட் தேர்விலிருந்து விலக்குப் பெற முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். கிராமப்புற மாணவர்கள் பாதிப்படைகிறார்கள் என்று நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் 85 ஆயிரம் பேர் கருத்துக் கூறியுள்ளனர். அதில்தான் கிராமப்புற மாணவர்களுக்கு ஏற்படுகிற பாதிப்புகளை தெளிவாக கூறியுள்ளார்.
அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர், மருத்துவம் பயில சேர்க்கை விகிதங்கள் குறைவு, அதற்கு பல்வேறுக் காரணங்களை எடுத்துச்சொல்ல முடியும். அந்த சதவீதத்தைக் கூடுதலாக்கவே தமிழக முதல்வர் அண்மையில் சட்டப்பேரவையில் தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு என்கிற சிறப்பானத் திட்டத்தை அறிவித்து, தொழிற்கல்வி பயில உள்ள மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகளை வழங்கியுள்ளார். 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் தொழிற்கல்வி பொறியியல், மீன்வளம், சட்டம் போன்ற பல்வேறு தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு கட்டண விலக்கு அளித்திருக்கிறார். இதன்மூலம் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ஒரு உத்வேகத்தை முதல்வர் ஏற்படுத்தியுள்ளார்.


முதல்வரின் நடவடிக்கையால் எதிர்காலத்தில் அரசுப் பள்ளியில் சேர பெரிய சிபாரிசுகள் தேவை என்ற நிலை ஏற்பட உள்ளது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அது ஆளுநரிடமிருந்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும். திமுகவின் தேர்தல் அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ள முதல் கூட்டத்தொடரிலேயே நீட் தேர்வுக்கு எதிரான சட்டமுன்வடிவு தயாரிக்கப்பட்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படும். இதன் பிறகு அடுத்தத்தடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தமிழக மாணவர்களின் மனநிலையைக் கருத்தில்கொண்டும், நீதிபதியின் சட்ட முன்வடிவை படித்துப் பார்க்கும்போதும் குடியரசுத்தலைவர் நிச்சயம் இதற்கு ஒப்புதல் அளிப்பார்” என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

click me!