பாஜகவில் அதிருப்தியில் இருக்கும் முக்கிய தலைவர்..? தட்டித் தூக்க ஸ்கெட்ச் போடும் திமுக!!

By Asianet TamilFirst Published Jul 27, 2020, 8:02 AM IST
Highlights

தமிழக பாஜகவில் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் முக்கிய தலைவரை தங்கள் பக்கம் இழுக்க திமுகவில் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வட்டமடிக்கின்றன.

கடந்த வாரம் பாஜகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார் வேதாரண்யம் வேதரத்தினம். வேதாரண்யத்தில் தனக்கென தனி செல்வாக்குக் கொண்ட அவர், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு 35 ஆயிரம் வாக்குகளைப் பெற்றார். திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸின் வெற்றி வாய்ப்பைப் பறித்தார் வேதரத்தினம். அண்மையில் பாஜகவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். துணைத் தலைவராக இருந்த வேதரத்தினம், தேசிய பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந்த அறிவிப்பு வெளியான அடுத்த சில நாட்களில் மீண்டும் திமுகவில் இணைந்தர் வேதரத்தினம்.
வி.பி. துரைசாமியை இழுத்ததற்குப் பதிலடியாக அதிருப்தியில் உள்ள பாஜகவினரை ஸ்கெட்ச் போட்டு தங்கள் பக்கம் இழுக்க திமுக மேலிடம் கட்சியினருக்கு ஏற்கெனவே சிக்னல் கொடுத்துள்ளது. தமிழிசை தலைவர் பதவியிலிருந்து சென்ற பிறகு, அந்தப் பதவிக்கு திருநெல்வேலியைச் சேர்ந்த முக்கியஸ்தர் பெயர் பலமாக அடிப்பட்டது. அந்தப் பொறுப்புக்கு அவர்தான் வருவார் என்றும் கூறப்பட்டது. ஆனால், எல். முருகன் நியமிக்கப்பட்டார். துணைத் தலைவர் பொறுப்பு மட்டுமே அவருக்கு வழங்கப்பட்டது. மாநில பொதுச்செயலாளர் பதவியும் கிடைக்காததால், அவர் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், அவரை  திமுகவில் இணைக்க திமுக வலை விரித்துள்ளதாக தகவல்கள் கசிகின்றன. இதுதொடர்பாக திமுக  தரப்பில் அவருடன் பேச்சுவார்த்தை நடப்பதாகவும்கூட கூறப்படுகிறது.


இத்தகவலையடுத்து நயினார் நாகேந்திரனை சமாதானப்படுத்தும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளதாகவும் தெரிகிறது. பாஜக  தலைவர் எல்.முருகன் திருநெல்வேலிக்கு சென்று அவரைச் சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பின்போது  அதிருப்தியில் உள்ளம் முக்கியஸ்தரை எல்.முருகன் சமாதனப்படுத்தியதாகத் தெரிகிறது. பி.டி. அரசக்குமார், வேதரத்தினம் வரிசையில் அந்த முக்கியஸ்தரும் திமுகவில் சேருவாரா, இல்லையா என்பது போகப்போகத் தெரிந்துவிடும். 

click me!