திமுக அடுத்த பொதுச்செயலாளர் வைகோ..? மு.க.ஸ்டாலின் என்ன நினைக்கிறார் தெரியுமா..?

By Asianet TamilFirst Published Apr 6, 2019, 8:15 AM IST
Highlights

நாடாளுமன்ற மாநிலங்களவையில் வைகோவுக்கு பதவி தர முன்வந்த திமுகவோடு மதிமுக இணையுமா என்ற கேள்விக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாடாலின் பதில் அளித்திருக்கிறார். 

மக்களவைத்  தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக, 3 தொகுதிகளை கேட்டுவந்தது. ஆனால், மக்களவை தேர்தலில் ஓர் இடம் வழங்கிய திமுக, வைகோவுக்காக மாநிலங்களவை பதவியை வழங்க முன்வந்தது. வரும் ஜூலை மாதம் மாநிலங்களவையில் காலியாக உள்ள 6 இடங்களில் ஒன்றில் வைகோ தேர்வு ஆவது உறுதியாகிவிட்டது. தேர்தலில் வைகோ நின்றால், அவரை வீழ்த்த பெரு நிறுவனங்கள் முயற்சி செய்யும் என்பதால், வைகோவுக்கு மாநிலங்களவை பதவி வழங்க திமுக முன்வந்ததை மதிமுகவினரும் வரவேற்கிறார்கள்.
மேலும் தாய்க் கழகமான திமுகவுடன் மதிமுகவை வைகோ இணைப்பார் என்ற செய்திகளும் கடந்த ஒரு மாதமாகவே அரசியல் அரங்கில் பேசப்பட்டுவருகிறது. ஈரோட்டில் தனிச் சின்னத்தில் போட்டியிட விரும்பிய மதிமுக, பின்னர் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்தது. எப்போதும் இந்த விஷயத்தில் சமரசம் செய்துகொள்ளாத வைகோ, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ஒத்துக்கொண்டது, திமுகவோடு செல்லும் முடிவின் முயற்சி என்றும் பேசப்பட்டது. திமுகவோடு மதிமுக இணைந்தால், க. அன்பழகனுக்கு பிறகு  பொதுச்செயலாளர் பதவி வைகோவுக்கு கிடைக்கும் என்று சொல்லுமளவுக்கு திமுக தொண்டர்கள் மத்தியிலேயே இந்தப் பேச்சுகள் உலா வருகின்றன.

 
இந்நிலையில் இதுபோன்று வெளியாகிக் கொண்டிருக்கும் ஊகங்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்திருக்கிறார். இதுதொடர்பாக  அவர் செய்திதாள் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “அண்ணன் வைகோ, திராவிட இயக்கத்தின் போர்க்குரலாகத் திகழ்பவர். திராவிடத்துக்கு எதிரான வஞ்சக சக்திகளை வீழ்த்துவது ஒன்றையே தனது இலக்காகக் கொண்டு செயல்படுகிறார். தனது தலைவரான கலைஞரிடம் தெரிவித்ததுபோல, திமுகவுக்கும் எனக்கும் தோள்கொடுத்து உதவுகிறார். மதிமுக தோழர்களும் அதே உணர்வுடன் செயல்படுகின்றனர். இதுதான் உண்மை நிலை. மற்றவை உங்கள் ஊகங்கள்.” என்று தெரிவித்திருக்கிறார்

.
ஸ்டாலினின் இந்த விளக்கம் மூலம் திமுக - மதிமுக இணைப்பு பற்றிய பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

click me!