மூத்த தலைவர் அன்பழகனை புறக்கணிக்கும் திமுக !! கொதிப்பில் குடும்பத்தினர் !!

By Selvanayagam PFirst Published Apr 6, 2019, 8:11 AM IST
Highlights

மக்களவைத் தேர்தலில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் குடும்பத்தினரை ஸ்டாலின் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. துரை முருகன், ஆற்காடு வீராசாமி போன்ற தலைவர்களின் வாரிசுகளுக்கு தேர்தலில் நிற்க வாய்ப்பளித்த திமுக , அன்பழகனின் வாரிசுகளுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என தொண்டர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனார்.

கருணாநிதிக்கு அடுத்து, திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களாக அன்பழகன், வீராசாமி, துரைமுருகன் போன்றவர்கள் இருந்து வருகின்றனர். . கருணாநிதியுடன் இந்த மூன்று பேரும் அப்போதுமே இருந்து வந்துள்ளனர்.

ஆனால் ஸ்டாலின் கொஞ்சம், கொஞ்சமாக  திமுகவை ஆக்கிரமிக்கத் தொடங்கிய பின்பு  அக்கட்சியில்  அன்பழகன், வீராசாமி, துரைமுருகன் ஆகியோரின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டது. வீராசாமியிடம் இருந்த பொருளாளர் பதவி, ஸ்டாலின் கைக்கு மாறியது. ஒருகட்டத்தில், பொதுப்பணித் துறை அமைச்சர் பதவியும், துரைமுருகனிடம் இருந்து பறிக்கப்பட்டது.

கருணாநிதி மறைவை அடுத்து, திமுக தலைவராக ஸ்டாலின் உருவெடுத்து விட்டார். அன்பழகனும், வீராசாமியும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், கட்சி பணிகளில் கவனம் செலுத்த முடியவில்லை. இதை பயன்படுத்தி, துரைமுருகன், ஸ்டாலினுடன் ஒட்டிக் கொண்டார். சட்டசபை செயல்பாடுகளில், ஸ்டாலினுக்கு சில யோசனைகள் கூறி, தனக்கான இடத்தை தக்கவைத்து விட்டார். இதற்கு பரிசாக, திமுக பொருளாளர் பதவி, துரைமுருகனுக்கு தரப்பட்டது.

மேலும் மக்களவைத்  தேர்தலில், வேலுார் தொகுதியை, தன் மகன் கதிர் ஆனந்துக்கு, துரைமுருகன் பெற்று தந்துவிட்டார். வீராசாமியும், ஸ்டாலின் மருமகன் சபரீசனையும், மகன் உதயநிதியையும் பிடித்து, தன் மகன் கலாநிதிக்கு, வடசென்னை தொகுதியை பெற்று விட்டார்.

ஆனால், 2014 மக்களவைத் தேர்தல் முதலே, பொதுச்செயலர் அன்பழகன் தன் மகன்களில் ஒருவருக்கு, தேர்தலில் வாய்ப்புக் கேட்டு,வருகிறார். ஆனால் கருணாநிதி இருக்கும் போதும் சரி, தற்போதும் சரி அன்பழகன் கண்டு கொள்ளப்படாமல் இருக்கிறார் என்பதே திமுகவில் தற்போதைய நிலைமை.


இப்போது, துரைமுருகன், வீராசாமி மகன்களுக்கு, சீட் வழங்கப்பட்டுள்ள நிலையில் அன்பழகனின் வாரிசுகளுக்கு சீட் கொடுக்காமல் இருப்பது அவர்கள் குடும்பதினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவின் அறிக்கைகள் அனைத்தும், அன்பழகன் பெயரில் வருகிறது. ஆனால், அவருக்கும், அவரது குடும்பத்திற்கும், கட்சியில் முக்கியத்துவம் இல்லை. எனவே, அவரது குடும்பத்தினரும், ஆதரவாளர்களும், விரக்தியில் உள்ளதாக திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

click me!