தனிச் சின்னத்தில்தான் போட்டி... வைகோ, திருமாவை தொடர்ந்து ஜவாஹிருல்லா சரவெடி அறிவிப்பு..!

By Asianet TamilFirst Published Jan 20, 2021, 10:10 PM IST
Highlights

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று திமுக கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சி அறிவித்துள்ளது.
 

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளுக்கு குறைந்த தொகுதிகள்தான் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் சிறு கட்சிகள் திமுக கட்சி சின்னமான உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும் என்று திமுக சார்பில் வலியுறுத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் ஏற்கனவே தங்கள் கட்சிகள் தனி சின்னத்தில்தான் நிற்கும் என்று கூறிவருகின்றன.

 
இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள இன்னொரு கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சியும் தனிச் சின்னத்தில்தான் போட்டியிடும் என்று அறிவித்துள்ளது. கடலூரில் அக்கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பாதாக கூறி மத்திய அரசு விவசாயிகளை கொச்சைப்படுத்தி வருகிறது. குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்த உள்ளனர். இந்தப் பேரணியை நடத்த அரசு அனுமதிக்க வேண்டும்.
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற பாடுபடுவோம். இந்தத் தேர்தலில் எங்களுடைய கட்சியின் தனிச்சின்னத்தில்தான் போட்டியிடுவோம். புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடர்பான பிரச்னை தொடக்கக் கட்டத்தில்தான் உள்ளது. தற்போதைய சூழலில் திமுக கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.” என்று ஜவாஹிருல்லா தெரிவித்தார். 

click me!