மின்சார வாரியத்தில் நஷ்டம் ஏற்பட்டது ஏன்..? மாஜி அமைச்சர் தங்கமணி மீண்டும் விளக்கம்..!

By Asianet TamilFirst Published Jun 27, 2021, 9:42 PM IST
Highlights

பொதுமக்களுக்கு மாதந்தோறும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டது. இதனால்தான் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
 

சென்னை ராயப்பேட்டையில் தங்கமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் 2018ஆம் ஆண்டு மின்சாரத்துறையில் 14 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என்று தணிக்கை துறை அறிக்கையில் கூறியுள்ளது. ஆனால், அதில் ஊழல் நடந்தை போல பொய்யான கருத்துக்கள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மின்சாரத்துறை மக்களுக்கு சேவை செய்யக்கூடிய ஒரு துறையாக மட்டுமே உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து பொருட்களும் விலையேறின. ஆனாலும் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் மின்சாரம் வழங்கினோம். கடந்த 5 ஆண்டுகளில் மின்சார விலையேற்றம் செய்யப்படவில்லை.
பொதுமக்களுக்கு மாதந்தோறும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டது. இதனால்தான் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதில் எந்த ஊழலும் நடைபெறவில்லை. கடந்த 2 ஆண்டுகளில் மின் துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மட்டும் ரூ. 2 ஆயிரம் கோடி உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 11 லட்சம் குடிசைப்பகுதி மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. நீண்டகால கொள்முதல் காரணத்தால் மட்டுமே நஷ்டம் ஏற்பட்டு உள்ளது என்று கூறுவது பொய். திமுக ஆட்சியில் இருந்தபோது 31 ஆண்டுகள் வரை ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.


கடந்த 2010-ல் கூட தணிக்கை துறை திமுக ஆட்சியில் 10 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் என்று சொன்னது. இப்படி செய்திருந்தால் நஷ்டம் ஏற்பட்டிருக்காது என்று எல்லா ஆட்சியிலும் கூறுவது வழக்கம். தமிழகத்தில் சேவை செய்யக்கூடிய ஒரு துறையில் மக்கள் தேவையைப் பூர்த்தி செய்யவே நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 2006ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி முடிகிற நேரத்தில் 9 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே கடன் இருந்தது. 2011-இல் திமுக ஆட்சி முடிகிற நேரத்தில் அந்த கடன் 45 ஆயிரம் கோடியாக இருந்தது. தற்போதுள்ள கடனில் ரூ. 60 ஆயிரம் கோடி முதலீட்டு கடன் மட்டுமே. தமிழகத்தில் அந்தப் பணிகள் முடியும்போது அதன் மூலம் வருமானம் கிடைக்கும்” என்று தங்கமணி தெரிவித்தார். 
 

click me!