திமுக ஆட்சியில் தேசியத்தையே கேள்வி கேட்கும் பேச்சுகள் அதிகரித்துவிட்டன... ஹெச்.ராஜா ஆவேசம்..!

By Asianet TamilFirst Published Jun 27, 2021, 9:25 PM IST
Highlights

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டின் தேசியத்தையே கேள்வி கேட்கும் பேச்சுகள் அதிகரித்துவிட்டன என்று தமிழக பாஜக மூத்தத் தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
 

காரைக்குடியில் ஹெச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டின் தேசியத்தையே கேள்வி கேட்கும் பேச்சுகள் அதிகரித்துவிட்டன. எம்எல்ஏ ஈஸ்வரன் தமிழக சட்டப்பேரவையில், ஆளுநர் உரையில் ஜெய்ஹிந்த் இல்லாததால் தமிழகமே தலைநிமிர்ந்தது என்று பேசுகிறார். இதுபோன்ற தலைகுனிவு வேறு எதுவும் இல்லை. தமிழகத்தின் செண்பகராமன் பிள்ளைதான் ஜெய்ஹிந்த் என்பதை முன்மொழிந் தார். அதன் பிறகுதான், நேதாஜி ஜெய்ஹிந்த் என்பதை பிரபலப்படுத்தினார்.
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கூட்டம் முடிந்த பிறகு 3 முறை ஜெய்ஹிந்த் என்று உரக்க சொல்வார். ஆனால், திமுக கூட்டணி எம்எல்ஏ இப்படி பேசியதை காங்கிரஸார் எப்படி சகித்துக் கொள்கிறார்கள் எனத் தெரியவில்லை. தேசியத்தை கேள்வி கேட்கும் பேச்சுகள் தற்போது அதிகரித்துவிட்டன. பிரிவினைவாதத்தை வளர்க்கும் சூழ்நிலைகளை உருவாக்க திமுக அரசு உடந்தையாக இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.” என்று ஹெச்.ராஜா தெரிவித்தார்.

click me!