கல்பாக்கம் அணு உலையை சுற்றியுள்ள ஊராட்சிகளில் பத்திரப் பதிவுக்கு தடை விதித்து அரசாணை ஏன்.. எஸ்டிபிஐ கேள்வி.

By Ezhilarasan BabuFirst Published Mar 2, 2021, 11:14 AM IST
Highlights

முன்னதாக அணு உலை எதிர்ப்பாளர்களின் நியாயமான எதிர்ப்பை அவர்களின் எச்சரிக்கை கூற்றை  ஆளும் வர்க்கம் மறுத்தது. எப்போதும் போல வாழலாம், தங்கள் தொழில்களை மேற்கொள்ளலாம், அணு உலைக்கு எதிரான போராட்டக்காரர்களின் பிரச்சாரம் பொய்யானது, வெளிநாடு சதி என்று  போராட்டக்காரர்களை தூற்றியது. 

அணு உலைகள் பாதுகாப்பானது எனில் கல்பாக்கம் அணு உலையை சுற்றியுள்ள ஊராட்சிகளில் பத்திரப் பதிவுக்கு தடை விதித்து அரசாணை வெளியிட்டிருப்பது ஏன் எனவும் குடிமக்களின் உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் ஆபத்தான அணு உலைகளை இழுத்து மூட வேண்டும் எனவும் எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு காரணமாக, அவசர நிலை பிரகடனத்தின் போது பொதுமக்களை வெளியேற்றுவது மிகவும் சிரமத்திற்கு உள்ளாகும் என்பதால், கல்பாக்கம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள சதுரங்கப்பட்டினம் மற்றும் கொக்கிலமேடு, மெய்யூர், எடையூர், குன்னத்தூர், நெய்குப்பி, கடும்பாடி, புதுப்பட்டினம், ஆமை பாக்கம், நெல்லூர், விட்டிலாபுரம் உள்பட 14 ஊராட்சி பகுதிகளில், மத்திய - மாநில அரசுகளின் அரசு ஆணையின்படி, இனிமேல் பத்திரப்பதிவு மேற்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அணு உலைகள் பாதுகாப்பானது என்று ஆளும் அரசுகள் கூறிவந்த நிலையில், கல்பாக்கம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளை சுட்டிக்காட்டி ஏன் இத்தகைய அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும் என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது.

இந்த அரசாணை மூலம் கல்பாக்கம் அணு உலையை சுற்றியுள்ள 14 ஊராட்சி பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்கள் சொத்துக்களின் மீது உரிமையற்றவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். அதோடு கதிரியக்கத்தை காரணம் காட்டி அவர்களை, அவர்களின் சொந்த இடத்திலிருந்து உள்நாட்டு அகதிகளாக வெளியேற்றவும் மத்திய - மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளது. 

கடந்த ஆண்டு கூடங்குளம் அணு உலை மையத்திலிருந்து சுமார் 5 கி.மீ. சுற்றளவுக்குள் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களை கட்டுவதற்கு அல்லது விரிவாக்கம் செய்வதற்கு ஊராட்சி அல்லது நகர நிர்வாகத்துறையிடம் அனுமதி வாங்குவது மட்டுமின்றி, இனி தேசிய அணுமின் கழகத்திடமும் தடை இல்லாச் சான்றையும் பெற வேண்டும் என்ற அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. அணு உலை காரணமாக தங்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகும், வாழ்விடத்தை இழக்க வேண்டிய சூழல் உருவாகும், வளர்ச்சி நடவடிக்கை என்கிற பெயரால் சொந்த இடங்களிலில் இருந்து தாங்கள் துரத்தி அடிக்கப்படுவோம் என்ற அச்சத்தை, அணு உலைக்கு எதிராக நடைபெற்று வந்த மக்கள் திரள் போராட்டங்களின் போது அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டினர். காரணம், அணு உலை விதிமுறைகளின் கீழ் உலக நாடுகளில் அத்தகைய சூழல் தான் நிலவி வந்தது. தற்போது அவர்கள் சுட்டிக்காட்டியது போன்ற நிகழ்வுகள் தற்போது கல்பாக்கத்திலும், கூடங்குளத்தில் நடைபெறத் தொடங்கியுள்ளது என்பதை அரசின் அறிவிப்பானைகள் சுட்டிக்காட்டுகின்றன.

முன்னதாக அணு உலை எதிர்ப்பாளர்களின் நியாயமான எதிர்ப்பை அவர்களின் எச்சரிக்கை கூற்றை  ஆளும் வர்க்கம் மறுத்தது. எப்போதும் போல வாழலாம், தங்கள் தொழில்களை மேற்கொள்ளலாம், அணு உலைக்கு எதிரான போராட்டக்காரர்களின் பிரச்சாரம் பொய்யானது, வெளிநாடு சதி என்று  போராட்டக்காரர்களை தூற்றியது. ஆனால், அது ஒவ்வொன்றாக இப்போது நடைபெற துவங்கியுள்ளது. மக்கள் அச்சப்பட்டது போன்று வாழ்வாதாரங்களை, வாழ்விடங்களை இழக்கக் கூடிய சூழலும் ஏற்பட்டுவிடுமோ என்ற ஐயம் இப்போது நடக்கும் நிகழ்வுகள்மூலம் எழுகிறது. 

தமிழகத்தில் கல்பாக்கம் மற்றும் கூடங்குளத்தில் தலா இரண்டு அணு உலைகள் செயல்பாட்டில் உள்ளன. கூடங்குளத்தில் மூன்று மற்றும் நான்காவது அணு உலைகள் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன. 5 மற்றும் 6வது அணு உலை அலகுகளை கட்டுவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுவிட்டது. அணு உலைப் பூங்காவாக  கூடங்குளம் மாற்றப்பட்டுள்ளதோடு, மேலும் அங்கு நாட்டில் உள்ள 22 அணு உலைகளின் கழிவுகளை கொட்டிவைக்கும் அணுக்கழிவு மையத்தை அமைக்கும் நடவடிக்கைகளும் துவங்கப்பட்டுள்ளன. இப்படி மிகப்பெரும் ஆபத்தான பகுதியாக தமிழகம் மாற்றப்படுவது குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கவலையை வெளிப்படுத்தி வந்தாலும், அரசு தான் செயல்படுத்த நினைத்த திட்டங்களை நிறைவேற்றுவதில் முனைப்பு காட்டி வருகின்றது. 

செர்னோபில், புகுஷிமா போன்ற இடங்களில் அணு உலைகளில் ஏற்பட்ட விபத்துகள் பல படிப்பினைகளை உலக நாடுகளுக்கு அளித்துள்ளன. அதன்மூலம் பல உலக நாடுகள் தங்களின் ஆற்றல் உற்பத்தியில் அணு உலையை தவிர்க்கத் தொடங்கியிருக்கின்றன. ஆனால் இந்தியாவிலோ மக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் ஆளும் வர்க்கம் கொடுக்கும் முக்கியத்துவத்தை நினைத்தால் கவலையாக உள்ளது. ஆகவே, குடிமக்களின் உயிர்களையும், உடைமைகளையும் பலிகொடுத்து மேற்கொள்ளப்படும் இத்தகைய அணு உலை திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.  கல்பாக்கம் அணு உலை அதன் நிர்ணயிக்கப்பட்ட காலத்தையும் தாண்டி செயல்பட்டு வருவதால் அதனை இழுத்து மூட வேண்டும். கூடங்குளத்திலும் அனைத்து விரிவாக்கப் பணிகளையும் கைவிட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட முறை பழுதடைந்த முதல் இரண்டு அணு உலைகளின் செயல்பாட்டை நிறுத்த வேண்டும். என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  

 

click me!