இனி முடிவெடுக்க வேண்டியது அதிமுக தான்..! கூட்டணியில் இருந்து ஒதுங்கிய தேமுதிக..! நடந்தது என்ன?

By Selva KathirFirst Published Mar 2, 2021, 11:02 AM IST
Highlights

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு வெறும் 11 தொகுதிகள் தான் என்பதில் அந்த கட்சி தலைமை உறுதியாக உள்ளதால் அடுத்து என்ன செய்வது என்று தேமுதிக ஆலோசனையை துவங்கியுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு வெறும் 11 தொகுதிகள் தான் என்பதில் அந்த கட்சி தலைமை உறுதியாக உள்ளதால் அடுத்து என்ன செய்வது என்று தேமுதிக ஆலோசனையை துவங்கியுள்ளது.

பாமக, பாஜகவிற்கு பிறகே தேமுதிகவை கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அதிமுக தலைமை அணுகியது. இதன் மூலமாக மற்ற இரண்டு கட்சிகளை காட்டிலும் தேமுதிக முக்கியம் இல்லை என்று அதிமுக கருதுவது தெளிவாக தெரிகிறது. ஆனால் தொகுதி ஒதுக்கீட்டில் மற்ற இரண்டு கட்சிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் தேமுதிகவிற்கு பாதியை கூட தர அதிமுக தயாராக இல்லை. பாமகவிற்கு 23 தொகுதிகள் என்று முடிவாகியுள்ள நிலையில் பாஜகவிற்கு 21 தொகுதிகள் பைனலாகியுள்ளது. ஆனால் தேமுதிகவிற்கு முதற்கட்ட பேச்சுவார்த்தையே பாதியில் முடிந்துள்ளது தெரியவந்துள்ளது.

முன்னாள் எம்எல்ஏ பார்த்தசாரதி தலைமையிலான தேமுதிக குழு அமைச்சர் தங்கமணியை சந்தித்து நேற்று முன் தினம் இரவு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தேமுதிகவிற்கு சுமார் 41 தொகுதிகள் தேவை என்று பார்த்தசாரதி பேச்சை தொடங்கியுள்ளார். ஆனால் அதை எல்லாம் காதிலேயே வாங்கிக் கொள்ளாத அமைச்சர் தங்கமணி தங்களால் 11 தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும் என்று கறாராக கூறியுள்ளார். இதன் பிறகு பேசி பிரயோஜனம் இல்லை என்று கூறியதுடன் மறுபடியும் நாளை வருவதாக கூறிவிட்டு தேமுதிக குழுவினர் பேச்சுவார்த்தையில் இருந்து பாதியிலேயே புறப்பட்டுள்ளனர்.

பேச்சுவார்த்தையில் நடந்த விஷயங்களை பிரேமலதா மற்றும் சுதீஷிடம் பார்த்தசாரதி விளக்கி கூறியுள்ளார். 11 தொகுதிகள் என்றால் கூட்டணி தேவையில்லை என்று தடாலடியாக கூறியுள்ளார் பிரேமலதா. ஆனால் சுதீஷோ மறுபடியும் நாளை பேசிப்பார்க்கலாம் என்று கூறியிருக்கிறார். இதனை அடுத்து மறுநாள் அதிமுக தரப்பில் இருந்து அமைச்சர் தங்கமணியே தேமுதிக தரப்பை தொடர்பு கொண்டுள்ளார். அவருடன் பிரேமலதா நேரடியாக பேசியுள்ளார். அப்போது தேமுதிகவிற்கு 11 தொகுதிகள் என்று தாங்கள் கூறியிருப்பது தங்களை அவமதிப்பது போல் உள்ளதாக பிரேமலதா சீறியிருக்கிறார்.

அத்தோடு வட மாவட்டங்களில் உள்ள கட்சிக்கே 23 தொகுதிகள் கொடுக்கிறார்கள். தமிழகத்தில் திமுக – அதிமுகவிற்கு இணையாக கிளைக்கழகம் உள்ள தங்களுக்கு வெறும் 11 தொகுதிகள் தானா என்றும் தங்கமணியிடம் பிரேமலதா கேட்டிருக்கிறார். அதற்கு நிதர்சனத்தை உணர்ந்து தேமுதிக தொகுதிகளை கேட்க வேண்டும், எல்லா விஷயத்திலும் பாமகவோடு தேமுதிக போட்டியிடக்கூடாது என்று அமைச்சர் பதில் அளிக்க செல்போன் பேச்சுவார்த்தையும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு தேமுதிக குழுவினர் வருவார்கள் என்று அமைச்சர் தங்கமணி காலை வெகு நேரம் காத்திருந்தார்.

ஆனால் தேமுதிக தரப்பு அமைச்சரை தொடர்பு கொள்ளவே இல்லை. இந்த விஷயத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காதுகளுக்கு அமைச்சர் தங்கமணி உடனடியாக பாஸ் செய்துள்ளார். பரவாயில்லை விட்டுவிடுங்கள், நாம் தற்போது அவர்களை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று எடப்பாடி பதில் அளிக்க அமைச்சர் உடனடியாக அதிமுக தலைமையகம் புறப்பட்டுவிட்டார். இதற்கிடையே தேமுதிக தரப்பும் அதிமுகவுடன் மறுபடியும் செல்ல ஆர்வம் காட்டவில்லை. அதிமுகவும் பாஜகவுடன் தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தயாராகிவிட்டது.

click me!