‘ஒன்றிய அரசு’ என அழைப்பதை ஓபிஎஸ் திடீரென விமர்சிப்பது ஏன்..? புட்டுப்புட்டு வைத்த திமுக எம்.பி.!

By Asianet TamilFirst Published Jul 4, 2021, 10:05 PM IST
Highlights

பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு, எப்படியாவது தன்னுடைய மகனை மத்திய அமைச்சராக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஓபிஎஸ் செயல்படுகிறார் என்று திமுக எம்.பி.யும் தகவல் செய்தித் தொடர்பாளருமான டி.கே.எஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார். 
 

 ‘ஒன்றிய அரசு’ என்று மத்திய அரசை அழைத்து இழிவுப்படுத்துவதா என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டிருந்தார். ஓபிஎஸின் இந்த அறிக்கைக்கு திமுக பதிலடி கொடுத்திருக்கிறது. அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் புதுஜ்க்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கூறுகையில், “அரசியலமைப்புச் சட்டப்படி ஒன்றிய அரசு என்று கூறுவதில் தவறில்லை. ஒன்றியம் என்றால் அவர்கள் சிறுமைதனம் என்று பதறுகிறார்கள். ஒன்றியம் என்பது ஒற்றுமையைக் குறிக்கும் சொல்தான்.

 
ஒன்றிய அரசு என்று கூறுவதை ஓபிஎஸ் விமர்சனம் செய்திருக்கிறார். பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு, எப்படியாவது அவருடைய மகனை அமைச்சராக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறார். அதிமுகவில் ஏற்கனவே இரண்டு தலைமை போட்டி இருக்கிறது. தற்போது மூன்றாவது போட்டியாளராக சசிகலாவும் வந்திருக்கிறார். அதிமுகவில் அந்தக் கட்சியில் தலைமை சிக்கல் தொடர்கிறது. முதல்வராக்கிய சசிகலாவை மதிக்காமல் இவர்கள் செயல்படுகிறார்கள். இவர்களுக்கு பதவியின் மீதுதான் அக்கறை. மக்கள் மீதோ, கட்சியின் மீதோ இல்லை என்பதைதான் இது காட்டுகிறது. 
பெட்ரோலுக்கு விலை குறைப்பு, காஸ் சிலிண்டருக்கு நூறு ரூபாய் மானியம் என்ற திமுக தேர்தல் அறிக்கையை விமர்சனம் செய்கிறார்கள். அப்படி விமர்சனம் செய்பவர்களுக்கு அரசாங்கமும் தெரியவில்லை. அரசியலும் தெரியவில்லை. நிதிநிலையும் தெரியவில்லை என்றுதான் அர்த்தம். இன்னும் திமுக அரசு நிதிநிலை அறிக்கையையே தாக்கல் செய்யவில்லை. நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லையெனில் விமர்சிப்பதை ஏற்கலாம். திமுக அரசு தேர்தல் அறிக்கையை முழுமையாக நிறைவேற்றும். 
திமுக அரசு மீது பழி போட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நீட் தேர்வு விவகாரத்தில் பாஜக வழக்கு தொடர்ந்திருக்கிறது. தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்றுத்தர வேண்டும் என்பதே திமுக அரசின் நோக்கம்” என்று டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார். 

click me!