திமுக வெற்றிக்கு உதவிய 43 தொகுதிகளும் 1.98 லட்ச வாக்குகளும்... மாஜி அமைச்சர் மீண்டும் புலம்பல்..!

By Asianet TamilFirst Published Jul 4, 2021, 9:35 PM IST
Highlights

சட்டப்பேரவைத் தேர்தலில் 43 தொகுதிகளில் 29 தொகுதிகளில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றியை நழுவ விட்டது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். 
 

மதுரை திருமங்கலம் அருகே ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில ஜெ.பேரவை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர் பி உதயகுமார் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் அவர் பேசுகையில், “நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 43 தொகுதிகளில் 29 தொகுதிகளில் மிகவும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றியை நழுவ விட்டது. தியாகராய நகர், தென்காசி, காட்பாடி போன்ற தொகுதிகளில் எல்லாம் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றியை நழுவ விட்டது.


அந்த 43 தொகுதிகளையும் சேர்த்து 1.98 லட்சம் வாக்குகள் மட்டும் கூடுதலாக பெற்று திமுக வெற்றி பெற்றது. அதிமுகவினர் சோர்வடையாமல் உழைத்திருந்தால், 1.98 லட்சம் வாக்குகளைப் பெற்றிருக்க முடியும். அப்படி பெற்றிருந்தால் மீண்டும் முதலமைச்சராக எடப்பாடி அமர்ந்திருப்பார். அமமுகவில் இருந்த முன்னாள் அமைச்சர்  பழனியப்பன், திமுகவில் இணைந்துள்ளார். இதனால் அமமுக என்ற கூடாரமே காலியாகிவிட்டது. பழனியப்பன் அதிமுகவில்தான் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால், அவர் ஏன் திமுகவில் சேர்ந்தார் என்பது தெரியவில்லை.


அமமுகவிலிருந்து  விலகி அதிமுகவில் சேர வந்தால் அவர்களை சிவப்பு கம்பளம் விரித்து அதிமுக தொண்டர்கள் வரவேற்க வேண்டும்” என்று ஆர்.பி.உதயகுமார் பேசினார். சில தினங்களுக்கு முன்பு எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகள் ஆலோசனைகள் கூட்டத்திலும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், 2 லட்சம் ஓட்டுகள் கூடுதலாக வாங்கியிருந்தால் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வராகியிருப்பார் என்று கூறியிருந்தார்.
 

click me!