மோடி அரசின் திட்டங்களை எதிர்ப்பதா..? நடிகர் சூர்யாவுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றிய பாஜக.!

By Asianet TamilFirst Published Jul 4, 2021, 9:48 PM IST
Highlights

பிரதமர் மோடி அரசின் மக்கள் நல திட்டங்களையும் சட்டங்களையும் உள்நோக்கத்துடன் நடிகர் சூர்யா சுய விளம்பரத்துக்காக தொடர்ந்து எதிர்க்கிறார் என்று தமிழக பாஜக இளைஞரணி தீர்மானம் நிறைவேற்றியது.
 

பாஜக இளைஞரணி செயற்குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பாஜக மாநில இளைஞரணி செயலாளர் வினோஜ் செல்வம் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  ஆளுநர் உரையின் மீதான விவாதத்தில் ‘ஜெய்ஹிந்த்’  வார்த்தையை இழிவுபடுத்திய திருச்செங்கோடு எம்.எல்.ஏ. ஈஸ்வரனை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல் நீட் தேர்வு குறித்து தொடர்ந்து உண்மைக்கு புறம்பாக  நடிகர் சூர்யா பேசி வருகிறார். மேலும் மோடி அரசின் மக்கள் நல திட்டங்களையும் சட்டங்களையும் உள்நோக்கத்துடன் சுய விளம்பரத்துக்காக தொடர்ந்து எதிர்க்கிறார்.
நடிகர்  சூர்யாவிற்கு கண்டனம் தெரிவிப்பதோடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தால், அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வு குறித்து தமிழக மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் ஸ்டாலின் அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கோயில் நிலங்களை மீட்க முதல்வர் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இன்னோரு தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.
கொரோனா இரண்டாவது அலையை வெற்றிகரமாக எதிர்கொண்ட பிரதமர் மோடிக்கு இக்கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் உடனடியாக திறக்க வேண்டும் என்றும் திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தப்படி பெட்ரோல் டீசல் விலை குறைப்பு , சமையல் எரிவாயு மானியம் , குடும்பத் தலைவிகளுக்குகு மாத ஊதியம் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்” என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களை வினோஜ் செல்வம் சந்தித்தபோது, “நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் உடனடியாக திறக்கப்பட வேண்டும். இந்து அறநிலையத்துறை நிலங்கள் அனைத்தும் உடனடியாக மீட்கப்பட வேண்டும். அவை கோயில்கள் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும். நீட் தேர்வு வந்தபிறகு 400-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். ஆனால், நீட்  தேர்வு குறித்து சூர்யா பொய்களை  பரப்பி வருகிறார்” என்று தெரிவித்தார். 

click me!