
வேலைக்காரி, ஓடிப்போனவள், போலீஸ்காரன் மகள் என எழுதியவர்கள் எல்லாம் தமிழ் வளர்க்கவில்லை, பக்தி இலக்கியம் படைத்தவர்கள்தான் வளர்த்தார்கள் என்று பாஜக., தேசியச் செயலர் எச்.ராஜா தனது டிவிட்டர் பதிவில் செய்தி வெளியிட்டுள்ளார்.
ஹெச்.ராஜா வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,
இன்று சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான இளைஞர்கள் தினத்தில் சுவாமி விவேகானந்தருக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள். இந்து மத சிறப்பை உலகறியச் செய்த விவேகானந்தர் வழி நடப்போம். தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்வியப் பிரபந்தம், கம்ப ராமாயணம், பெரிய புராணம் ஆகியவற்றை தந்த ஆழ்வார்களும், நாயன்மார்களும், கம்பனும், இந்து ஆன்மீக பெரியோரும் தான் தமிழ் வளர்த்தனர். வேலைக்காரி, ஓடிப்போனவள், போலீஸ்காரன் மகள் ஆகியவற்றை எழுதியவர்கள் அல்ல. தமிழ் இளைஞர்கள் சிந்தனைக்கு... என குறிப்பிட்டுள்ளார்.
ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் அவதூறுப் பேச்சை ஒட்டி, ஹெச்.ராஜா பதில் அளித்தார். அப்போது, வைரமுத்து பயன்படுத்திய வார்த்தைகளைப் போல், கொச்சை வார்த்தைகளால் வைரமுத்துவை சாடியிருந்தார். இதற்காக ஹெச்.ராஜாவை திரையுலகினர் சிலர் கண்டித்தனர். இந்நிலையில், சினிமாக்கள் மூலம் கதை வசனம் எழுதி ஆட்சியைப் பிடித்த திமுக.,வினர் வளர்த்தது தமிழில்லை என்று இளைஞர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார் ஹெச்.ராஜா.