
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவை, ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. தினகரன் இன்று சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது இளவரசி குடும்பத்துடனான மோதல் குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இளவரசி குடும்பத்தைச் சேர்ந்த விவேக், கிருஷ்ணப்பிரியா ஆகியோர், தினகரனை மறைமுகமாக எதிர்க்கின்றனர். ஜெயலலிதா தொடர்பான வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், கிருஷ்ணப்பிரியா, தினகரனை கடுமையாக விமர்சனம் செய்தார். இதனால் தினகரன், கிருஷ்ணப்பிரியா மீது கோபத்தில் இருப்பதாகவும் தெரிகிறது. அதேபோல், கிருஷ்ணபிரியாவை கட்டுப்படுத்தாமல், விவேக் வேடிக்கை பார்த்ததார் என்ற ஆதங்கமும் தினகரனுக்கு உள்ளது.
அதிமுக அம்மா அணி சார்பாக கடந்த முறை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட தினகரனுக்கான செலவுகளை விவேக் பார்த்துக் கொண்டார். ஆனால் இம்முறை நடந்த இடைத்தேர்தலில், விவேக் ஒதுங்கி கொண்டார். விவேக் மீதான கோபத்துக்கு இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
இதுபோன்ற பல்வேறு விஷயங்களை, கடந்த முறை சசிகலாவிடம், தினகரன் கூறியுள்ளார். அது மட்டுமல்லாது, தற்போது விவேக் வசம் உள்ள கணக்கு வழக்கு விவரங்கள் தினகரன் தரப்புக்கு போகலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான், சிறையில் இருக்கும் சசிகலாவை தினகரன் இன்று சந்திக்க உள்ளார். இதற்காக தினகரன் பெங்களூரு புறப்பட்டுள்ளார். சசிகலாவுடனான இந்த சந்திப்பின்போது, தினகரனுக்கு எந்தமாதிரியான உத்தரவுகளை வழங்குவார் என்பது அவர்களின் சந்திப்புக்குப் பிறகுதான் தெரியும்.
தினகரன் கடந்த முறை சசிகலாவை சென்றபோது பார்க்க மறுத்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று சசிகலாவை தினகரன் இன்று மீண்டும் சந்திக்கிறார்.