
அதிமுகவின் செய்தி தொடர்பாளர் குறித்து அறிக்கையை ஒருங்கிணைப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளரும் இன்று அறிவித்தனர். இந்த பட்டியலில் ஆவடி குமாரின் பெயர் இடம்பெறவில்லை.
தமிழக சட்டசபை கூட்டம், வரும், 8 ஆம் தேதி தொடங்குகிறது. அன்று, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், சட்டசபையில் உரையாற்றுகிறார். கூட்டத்தில்,சுயேச்சையாக வெற்றி பெற்ற தினகரனும், பங்கேற்க உள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், 'டிபாசிட்'டை பறிகொடுத்த தி.மு.க.,வினர், சட்டசபையில், பல்வேறு பிரச்னைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளனர். மேலும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களை தங்கள் வசம் இழுத்து, ஆட்சியை கவிழ்க்க, தினகரனும் முயற்சித்து வருகிறார்.
இவற்றை முறியடிக்கவும், சட்டசபை கூட்டத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை தீர்மானிக்கவும், அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், இன்று காலை, 10:00 மணிக்கு, சென்னையில், ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் கலந்து கொண்டு உரையாற்றினர். இந்த கூட்டத்தில், சொந்த காரணங்களின் காரணமாக 7 எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.
அதிமுகவில் 12 பேர் செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், வளர்மதி, கோகுலா இந்திரா, வைகைச்செல்வன், ஜேசிடி பிரபாகர், முன்னாள் எம்எல்ஏக்கள் சமரசம், கோவை செல்வராஜ், தீரன் என்ற ராஜேந்திரன், மகேஸ்வரி பாபு முருகவேல், முன்னாள் எம்.பி., கே.சி.பழனிச்சாமி, மருது அழகுராஜ் ஆகியோர் செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை தவிர வேறு யாரும் அதிமுக சார்பில் மீடியாக்களில் கலந்து கொள்ள அனுமதி இல்லை.
தோழமை கட்சிகளில் இந்திய தேசிய முஸ்லீம்லீக் கட்சி மாநில தலைவர் ஜவஹர் அலி மட்டுமே கலந்து கொள்வார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஜெயலலிதா இருந்தபோது, டிவி மீடியாக்களில் பங்கேற்று வந்த ஆவடி குமார், இந்த பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.