
அனைத்து எம்.எல்.ஏக்களும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியதாகவும் கூட்டத்தில் யார் யார் எதற்காக பங்கேற்கவில்லை எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
தமிழக சட்டசபை கூட்டம், வரும், 8 ஆம் தேதி தொடங்குகிறது. அன்று, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், சட்டசபையில் உரையாற்றுகிறார். கூட்டத்தில்,சுயேச்சையாக வெற்றி பெற்ற தினகரனும்,பங்கேற்க உள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், 'டிபாசிட்'டை பறிகொடுத்த தி.மு.க.,வினர், சட்டசபையில், பல்வேறு பிரச்னைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளனர். மேலும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களை தங்கள் வசம் இழுத்து, ஆட்சியை கவிழ்க்க, தினகரனும் முயற்சித்து வருகிறார்.
இவற்றை முறியடிக்கவும், சட்டசபை கூட்டத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை தீர்மானிக்கவும், அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், இன்று காலை, 10:00 மணிக்கு, சென்னையில், ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.
இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இந்த கூட்டத்தில், சொந்த காரணங்களின் காரணமாக 7 எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், இந்த ஆட்சியை யார் நினைத்தாலும் ஆட்டவும் முடியாது அசைக்கவும் முடியாது எனவும் ஸ்டாலினோ, தினகரனோ ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் திட்டம் பலிக்காது எனவும் தெரிவித்தார்.
எம்.எல்.ஏக்கள் ஒற்றுமையாக உள்ளனர் என கூறி 7 எம்.எல்.ஏக்கள் எதற்காக பங்கேற்க வில்லை என்ற லிஸ்டை வாசித்தார்.
அதில், செல்லூர் ராஜு, பிரபு, பவுன்ராஜ் ஆகியோர் சபரி மலைக்கு சென்றுள்ளதாலும், கடம்பூர் ராஜு, பாஸ்கரன் ஆகியோர் சிவங்கையில் நடைபெறும் வேலுநாச்சியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுள்ளதாலும் சிவசுப்ரமணி , ஆறுக்குட்டி ஆகியோர் உடல்நலக் குறைவால் மருத்துவமனை சென்றுள்ளதாலும் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.
மேலும் இந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் 104 சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.