
திமுகவின் முன்னாள் தென்மண்டல அமைப்பாளரான மு.க.அழகிரி, திமுக தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் இன்று சந்தித்தார். அப்போது அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக இரண்டு அணிகளாக பிளவுபட்டு போட்டியிட்ட நிலையிலும், திமுக வெற்றி பெறாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தோல்வி குறித்து திமுகவின் முன்னாள் தென்மண்டல அமைப்பாளரான மு.க.அழகிரி, திமுகவில் மாறுதல் தேவை என்று கருத்து தெரிவித்திருந்தார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவின் தோல்வி குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு, மு.க.அழகிரி வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது அவர், இடைத்தேர்தலில் திமுகவின் தோல்வி குறித்து சில கருத்துக்களைக் கூறி இருந்தார். தம்பி வா, தலைமையேற்கவா என்றால் ஜெயிக்க முடியாது என்றும் களப்பணி ஆற்ற வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
வெற்றி பெற்ற தினகரனுக்கு ராதாரவி வாழ்த்து சொல்கிறார். இதற்கு அவர் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இவர் போன்றவர்களுக்குத்தான் திமுகவில் பொறுப்பு கொடுத்தருக்கிறார்கள். சுயநலத்துடன் இருப்பவர்களை கட்சியில் இருந்து மாற்ற வேண்டும் என்றும் உண்மையான விசுவாசிகளுக்கு பொறுப்புகள் வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
வைகோ என்னை சந்தித்ததற்காக என் மீது நடவடிக்கை எடுத்ததாக சொன்னார்கள். அதே வைகோ, முரசொலி பவள விழாவுக்கு அழைக்கப்பட்டார்; ஸ்டாலின் முதலமைச்சராவால் என்று இப்போது கூறுகிறார். இப்போது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே என்று காட்டமாக கூறினார்.
கட்சிக்கு தொடர்ந்து துரோகமிழைத்து வருபவர்களிடம் நான் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்றும், கட்சிக்கு நான் வர வேண்டுமானால் அவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்கட்டும் அப்போது பார்க்கலாம் என்றும் மு.க.அழகிரி கூறியிருந்தார்.
அழகிரியின் இந்த பேச்சு, திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. அவருக்கு எதிராக பலர் எதிராக கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில், மு.க.அழகிரி, திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார்.
சென்னை, கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை, மு.க.அழகிரி இன்று காலை சென்று சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய மு.க.அழகிரி, கருணாநிதியின் உடல்நிலை நன்றாக உள்ளது என்றும் அவருடன் தான் நலம் விசாரித்துவிட்டு வந்ததாகவும் கூறினார்.
மேலும், நடிகர் ரஜினிகாந்துடனான சந்திப்பு குறித்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ரஜினியை சந்திக்கவில்லை என்றும், அதற்கான நேரம் கொடுக்கப்படவில்லை என்றும் அழகிரி கூறினார்.