கனமழையால் மின்சார பாதிப்பா..? இந்த வாட்ஸ் அப் எண்களில் புகார் பண்ணுங்க..!

First Published Dec 1, 2017, 11:29 AM IST
Highlights
whatsapp numbers announced for power related complaints


மழைக்காலங்களில் ஏற்படும் மின்சார பிரச்னைகள் தொடர்பாக, மக்கள் மின்சார வாரியத்திற்கு எளிதில் புகார் தெரிவிக்க ஏதுவாக வாட்ஸ் அப் சேவை மையங்களை மின்சார வாரியம் தொடங்கியுள்ளது.

கன்னியாகுமரி அருகே தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஓகி புயலால், கன்னியாகுமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்துவருகிறது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கிவிட்டது. 20000க்கும் அதிகமான மரங்களும் 4000 மின்கம்பங்களும் சாய்ந்துள்ளன. போக்குவரத்து முடங்கியுள்ளது.

மாவட்டம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு கோபுரங்கள் இயங்காததால் செல்போன் சேவை முடங்கியுள்ளது. இவ்வாறு கன்னியாகுமரி மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றுலும் முடங்கியுள்ளது.

ஓகி புயல் கன்னியாகுமரியிலிருந்து விலகி திருவனந்தபுரத்திற்கு அருகே சென்றுவிட்டதாகவும் புயல் சின்னமானது லட்சத்தீவை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் கனமழையும் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும் என இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், புயல், கனமழை போன்ற பேரிடர் சமயங்களில் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்படும். சில சமயங்களில் பேரிடாரால் மின்கம்பங்கள் விழுவதால் மின்சாரம் துண்டிக்கப்படும். மேலும் ஆபத்தான வகையில், கீழே கிடக்கும் மின்கம்பிகளை மிதித்து உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் இருக்கும். இதுபோன்ற மின்சாரம் தொடர்பான பிரச்னைகளை மின்சார வாரியத்திற்கு எளிதாக தகவல் அளிக்க வாட்ஸ் அப் சேவை சேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொதுமக்கள், மின் உபகரணங்கள் பற்றிய புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை முழு முகவரி, புகாரின் தன்மை, இடம், பகுதி மற்றும் புகைப்படத்துடன் கீழே தெரிவிக்கப்பட்டுள்ள அந்தந்த மாவட்ட வாட்ஸ் அப் எண்களுக்கு தெரியப்படுத்தலாம். பெறப்படும் தகவல்கள், தொடர்புடைய அலுவலர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை  –  9445850829 

காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் – 9444371912 

ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல்  –  9445851912

திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கரூர் – 9486111912 

மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை  –  9443111912 

விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் – 9445855768 

கோயம்பத்தூர், திருப்பூர் மற்றும் நீலகிரி – 9442111912 

நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் – 8903331912, 

வேலூர், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி  –  6380281341.

மேற்கண்ட வாட்ஸ் அப் எண்களுக்கு, மின்சாரம் தொடர்பான புகார்களை விரிவாக அனுப்பினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
 

click me!