சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் இதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
செந்தில் பாலாஜி கைது
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துதுறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. சுமார் 10ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கு விசாரணை சூடு பிடித்த நிலையில், கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீட்டில் ஜூன் 13ம் தேதி 20க்கும் மேற்பட்ட அமாலக்கத்துறை அதிகாரிகள் மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்புடன் சோதனை நடத்தினர்.தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜி மீது சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார்.
undefined
ஜாமின் மனு தள்ளுபடி
அப்போது அவருக்கு இருதய பகுதியில் அடைப்பு இருந்ததையடுத்து பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து ஜூலை மாதம் மத்தியில் புழல் சிறையில் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டார். இதனிடையே செந்தில் பாலாஜி கவனித்து வந்த இலாக்காக்கள் மற்ற அமைச்சர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது. செந்தில் பாலாஜி தொடர்ந்து இலாக்கா இல்லாத அமைச்சராக செயல்பட்டு வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆளுநர் ரவி, செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். ஆனால் அடுத்த ஒரு சில மணி நேரத்தில் தனது உத்தரவை திரும்ப பெற்றுக்கொண்டார். இதனையடுத்து இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்ந்த செந்தில் பாலாஜி சிறையில் இருந்து விடுவிக்க கோரி ஜாமின் மனு தாக்கல் செய்தார். கீழமை நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி
இதன் காரணமாக 200 நாட்களுக்கு மேல் சிறையில் தவித்து வருகிறார். இந்தநிலையில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக செந்தில் பாலாஜி தாமாக முன்வந்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் செந்தில் பாலாஜி ராஜினாமாவிற்கான காரணம் வெளியாகியுள்ளது. ஜாமின் மனு விசாரணையின் போது செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருப்பதால் சாட்சியை கலைக்க கூடும் என அமலாக்கத்துறை வாதாடி வருகிறது. இதன் காரணமாகவே தனது ஜாமின் மனு நிராகரிக்கப்படுவதாக வழக்கறிஞர்கள் சட்ட ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.
ராஜினாமா காரணம் என்ன.?
மேலும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் எதிர்கட்சிகள் இதையே பிரச்சாரம் செய்ய வாய்ப்பும் உள்ளது எனவே இதை அனைத்தையும் கருத்தில் கொண்டே செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் செந்தில் பாலாஜி திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைய இருப்பதாகவும், இதன் காரணமாகவே தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த்தாக வெளியான தகவலை செந்தில் பாலாஜி தரப்பு மறுத்துள்ளது.
இதையும் படியுங்கள்