தமிழக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி, எ.வ.வேலு மற்றும் ஜெகத்ரட்சகன் உள்ளிட்டவர்களின் வீடுகளில் அமலாக்கதுறையும், வருமான வரித்துறையும் சோதனை நடத்தி வரும் நிலையில், இதுவரை நடைபெற்ற சோதனையில் சிக்கியது என்ன? என கேள்வி எழுந்துள்ளது.
திமுக அமைச்சரை நெருக்கும் ஐடி சோதனை
தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் முக்கிய பங்கு வகிக்கும் அமைச்சர்களின் இல்லங்கள், அலுவலகங்களில் அடுத்தடுத்து வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது தமிழகத்தை மட்டுமில்லாமல் நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி நெருக்க நெருங்க எதிர்கட்சிகள் மீதான நெருக்கடியையும் ஆளும்கட்சியான பாஜக கொடுத்து வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் வருமானம் தொடர்பாக ஆய்வு நடத்தி தான் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதனை அரசியலாக பார்க்க கூடாது என பாஜக தெரிவித்துள்ளது.
சிக்கிய செந்தில் பாலாஜி
இதனிடையே திமுக அமைச்சர்களில் முதலாவதாக கை வைத்தது செந்தில் பாலாஜி இல்லத்தில் தான், கடந்த மே மாதம் வருமான வரித்துறையானது கரூர், கோவை, சென்னை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தியது. அப்போது கரூரில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் வீடு தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி, வீடு கட்டுவதற்கான வருமானம் தொடர்பாக விளக்கம் அளிக்கஉத்தரவிட்டு சீல் வைத்தனர். இதனையடுத்து ஒரு சில நாட்களில் அமலாக்கத்துறை களம் இறங்கி செந்தில் பாலாஜியை கைது செய்தது. மேலும் அமலாக்கத்துறையும் பல இடங்களில் சோதனை செய்து ஆவணங்களை கைப்பற்றி செக் வைத்தது. மேலும் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாரையும் கைது செய்ய தீவிரமாக தேடி வருகிறது. ஆனால் யாருடைய பிடியிலும் சிக்காமல் கடந்த 4 மாதங்களாக தலைமறைவாகவுள்ளார்.
பொன்முடிக்கு நெருக்கடி
இந்த சோதனை முடிவடைந்த அடுத்த ஒரு சில நாட்களிலேயே மூத்த அமைச்சராக உள்ள பொன்முடி மற்றும் அவரது மகனும் எம்பியுமான கவுதம சிகாமணி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனையை தீவிரப்படுத்தியது. இந்த சோதனையில் , ரூ. 81.7 லட்சம் பணம், சுமார் ரூ. 13 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் (பிரிட்டிஷ் பவுண்டுகள்) ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.41.9 கோடி நிலையான வைப்பு நிதியும் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அடுத்து ஒரு சில நாட்களில் பொன்முடியை விசாரணைக்கு அழைத்த அமலாக்கத்துறை விசாரணை நடத்தி விடுவித்தது.
அடுத்த குறி- ஜெகத்ரட்சகன், எ.வ வேலு
இதனை அடுத்து திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வீட்டில் கடந்த மாதம் வருமான வரித்துறை சுமார் 5 நாட்கள் வரை சோதனை நடத்தியது. இந்த சோதனையில் கணக்கில் வராத பல கோடி ரூபாய், வருமான வரி செலுத்தாதற்கான ஆவணங்கள், பல நூறு கோடி ரூபாய் வரி ஏய்ப்பு ஆகியவை கண்டறியப்பட்டது. இந்த நிலையில் அடுத்ததாக தற்போது தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவை வருமான வரித்துறை சுற்றி வளைத்து சோதனை நடத்தி வருகிறது. அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்தமாக பல்வேறு கல்லூரிகள், நிறுவனங்களில் சோதனை தொடங்கியுள்ளது. இந்த சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தெரியவரும். திமுக நிர்வாகிகளை குறிவைத்து நடத்தப்படும் சோதனை அரசியல் அரங்கில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதையும் படியுங்கள்
அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை சோதனை.. என்ன காரணம் தெரியுமா?