திமுக அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை இல்லாத அளவிற்கு சாதிய தீண்டாமை வன்கொடுமைகள் தலைவிரித்து ஆடுகிறது- இபிஎஸ்

By Ajmal Khan  |  First Published Nov 2, 2023, 12:13 PM IST

பட்டியலின இளைஞர்கள் மீது கொடுஞ்செயலை செய்தவர்களை வெறும் வழிப்பறி வழக்காக பதிய முயற்சிக்காமல் , காவல்துறை இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 
 


பட்டியலின இளைஞர் மீது தாக்குதல்

நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் அருகே பொது இடத்தில் சிறுநீர் கழித்ததற்காக  பட்டியலின இளைஞர்கள் இருவரை பிடித்து கண்மூடித்தனமாக தாக்கிய கும்பல், அவர்களின்  ஆடைகளை களைந்து, அவர்கள் மீது  சிறுநீர் கழித்து வன்கொடுமை செய்திருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.  

Tap to resize

Latest Videos

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நெல்லையில் பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர்களை கஞ்சா போதையில் 6 பேர் கொண்ட கும்பல் நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்ததாக பத்திரிக்கை செய்திகளிலும் , சமூக ஊடகங்களிலும் வந்துள்ளது , இக்கொடுர சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்கள். 

திமுக ஆட்சியில் அதிகரித்த தீண்டாமை கொடுமை

இந்த விடியா திமுக அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை இல்லாத அளவிற்கு சாதிய தீண்டாமை வன்கொடுமைகள் தலைவிரித்து ஆடுகிறது என்பதை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது. கஞ்சா போதையில் இருந்த கும்பல், ஆற்றில் குளித்து கொண்டிருந்த இளைஞர்கள்  பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிந்து , அவர்களை சரமாரியாக தாக்கியதுடன் அவர்கள் மீது சிறுநீர் கழித்து துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது,

இது ஒட்டுமொத்த மனித இனத்தையும் அவமானப்படுத்தும் செயல், ஆகவே இந்த கொடுஞ்செயலை வெறும் வழிப்பறி வழக்காக பதிய முயற்சிக்காமல் , காவல்துறை இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட பட்டியலின இளைஞர்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டுமெனவும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படியுங்கள்

பட்டியலின இளைஞர்களின் ஆடைகளை களைந்து, சிறுநீர் கழித்து வன்கொடுமை; தாக்குதல் - ராமதாஸ் ஆவேசம்

click me!