செவிலியர் பணி நிரந்தரம்.. அரசு செய்யும் கைமாறு இதுதானா.? தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய சீமான்!

Published : Jan 01, 2023, 03:29 PM IST
செவிலியர் பணி நிரந்தரம்.. அரசு செய்யும் கைமாறு இதுதானா.? தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய சீமான்!

சுருக்கம்

கொரோனா பேரிடர் காலத்தில் தொகுப்பூதிய பணியாளர்களாகச் சேர்க்கப்பட்ட செவிலியர்களை உடனடியாகப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் - சீமான்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பெருந்தொற்றுத் தடுப்பு பணிகளுக்காகத் தொகுப்பூதிய அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை தமிழ்நாடு அரசு பணிநீக்கம் செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

பேரிடர் காலத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது தன்னலமற்று சேவையாற்றிய செவிலியர்களின் உழைப்பினை உறிஞ்சிவிட்டு, தற்போது வேலையில்லை என்று கூறி ஒரே நாளில் வீட்டிற்கு அனுப்புவது கொடுங்கோன்மையாகும். தமிழ்நாடு மருத்துவப் பணிகள் தேர்வாணையத்தின் மூலம் பணி நிரந்தர உறுதிமொழியுடன் கொரோனா நோய்த்தொற்றுப் பேரிடர் காலத்தில் ஏறத்தாழ 4000 செவிலியர்கள் பெருந்தொற்றுத் தடுப்புப் பணிகளுக்காக முந்தைய அதிமுக அரசால் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க..TN Rain Alert : ஜனவரி 3 முதல் 5 வரை மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை

இரவு - பகல் பாராது மக்களின் இன்னுயிர் காக்கும் அரும்பணியில் அயராது ஈடுபட்டு வந்த செவிலியர்கள், அரசு உறுதியளித்தப்படி தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டி கடந்த இரண்டு ஆண்டிற்கும் மேலாகப் போராடி வந்தனர். ஒப்பந்த செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்யாததோடு, அரசுப் பணியாளர்களுக்கான எவ்வித உரிமையோ, சலுகையோ வழங்காமல் மிகக்குறைந்த ஊதியமாக மாதம் ரூபாய் 7,700 மட்டுமே வழங்கி கொத்தடிமை போல் நடத்தியது அன்றைய அதிமுக அரசு.

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒப்பந்த செவிலியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்து அதிகாரத்தை அடைந்த திமுக அரசு ஆட்சிப்பொறுப்பேற்று கடந்த 20 மாதங்களாகியும் பணிநிரந்தரம் செய்யாமல் ஏமாற்றியதோடு, தற்போது திடீரென அவர்களைப் பணிநீக்கம் செய்திருப்பது அப்பட்டமான தொழிலாளர் விரோதப்போக்காகும்.

தமிழ்நாட்டில் தற்போது புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் கடுமையான மருத்துவர் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை நிலவி நோயாளிகளை உரிய நேரத்தில் கவனிக்க முடியாத அவலநிலை நிலவுகிறது. தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் அதிகளவில் செவிலியர்களது சேவை தேவைப்படும் நிலையில், திமுக அரசு தொகுப்பூதிய செவிலியர்களைப் பணிநிரந்தரம் செய்யாமல் பணிநீக்கம் செய்திருப்பது அதன் கொடுங்கோன்மை மனப்பான்மையையே வெளிப்படுத்துகிறது.

இதையும் படிங்க..BJP Vs DMK : திமுகவுக்கு தைரியம், திராணி இருந்தால் 2024 தேர்தலில் தனித்து போட்டியிடுங்கள்.. தமிழக பாஜக அதிரடி!

தங்கள் இன்னுயிரைப் பொருட்படுத்தாது அரசு அழைத்தவுடன் ஓடோடி வந்து சேவை புரிந்த செவிலியர்களுக்கு அரசு செய்யும் கைமாறு இதுதானா? என்ற கேள்வி எழுகிறது. எதிர்காலத்தில் மீண்டுமொரு பெருந்தொற்று ஏற்பட்டால் செவிலியர்கள் யாரும் உதவ முன்வராத அளவிற்குத் தன் மீதான நம்பகத்தன்மையை முற்றாகச் சீர்குலைத்துள்ளது திமுக அரசு. ஆகவே, ஒப்பந்த செவிலியர்களைப் பணிநீக்கம் செய்யும் முடிவைக் கைவிட்டு, அவர்களை உடனடியாகப் பணிநிரந்தரம் செய்து, ஏழை மக்களுக்கான மருத்துவச் சேவை தடைபடாமல் தொடர வழிவகைச் செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்.

மேலும், கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த செவிலியர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன். போற்றுதலுக்குரிய செவிலியர்கள் தங்களின் வாழ்வாதார உரிமைக்காக முன்னெடுக்கும் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தனது முழுமையான ஆதரவினை வழங்கி, கோரிக்கைகள் வெல்லும்வரை துணை நிற்கும் என்று உறுதியளிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க..தனியாரிடம் செல்லும் என்எல்சி.. 2 ‘திமுக’ அமைச்சர்கள் காரணம் - பரபரப்பை கிளப்பும் அன்புமணி ராமதாஸ்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!
செந்தில் பாலாஜிக்கு பெரும் நிம்மதி..! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..! முழு விவரம்!