
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத மையமாகி போயிருக்கிறார் கமல்ஹாசன். அ.தி.மு.க. அணிகள் நிகழ்த்தும் அச்சுபிச்சு பரபரப்புகளுக்கு நடுவில் கமலின் அரசியல் பிரவேசம் பற்றிய செய்திகளும் டிரெண்டிங்கிலேயே இருக்கின்றன.
அந்த வகையில் அவருடைய சமீபத்திய பேட்டி ஒன்று வைரலாகியிருக்கிறது. ’கமல் துவங்கப்போகும் கட்சிக்கு காசு தரப்போகும் பெரும்புள்ளி (அ) நிறுவனம் எது?’ எனும் தலைப்புடன் பகிரப்பட்டு வரும் அந்த வீடியோவில்...
அரசியல் நடத்துவதற்கு பெரும் நிதி தேவை! அதற்கான முதுகெழும்பு யார்? யாருடைய பின்னணியில் கள அரசியலுக்கு தயாராகிறீர்கள்?...என்று கேட்டதும்
“30 வருடங்களுக்கு முன்னால் அம்பானி, ஒரு சின்ன அறையை சில மணி நேரங்களுக்கு வாடகைக்கு எடுத்துதான் பிஸ்னஸை ஆரம்பிச்சார் அப்படின்னு அவர் மகன் சொல்ல கேட்டிருக்கிறேன் நான். தான் அந்த அறையிலிருக்கும் மணி நேரங்களுக்கு மட்டுமே தன்னுடைய நேம் போர்டை அங்கே மாட்டியிருப்பார், டைம் முடிந்ததும் கையோடு கழட்டிட்டு போயிடுவார். பிறகு மறுநாள் வருவார். எதை நம்பி இதை ஆரம்பித்தார் அவர்? மக்களிடத்தில்தான் இருக்கிறது பணம். அதே தான் எனக்கும்.
கயவர்கள் சேரை காலி பண்ணிய பிறகு கஜானாவை நிரப்பியதும், நிரப்ப போவதும் மக்கள்தான்.
பணம் தேவைதான். அதை கொடுக்குறதுக்கு நிறைய பேர் ரெடியா இருக்கிறாங்க. கொடுக்குறதை ஓப்பனா கொடுக்கணும். சாமிக்கும், தேவர்களுக்கும், மத்தவங்களுக்கும், கொடுக்குறீங்க. இங்கே ஏன் கொடுக்க கூடாது? இதை ஏன் அது மாதிரி நினைக்க கூடாது!
இது பற்றியெல்லாம் அன்றைக்கு கெஜ்ரிவாலுடன் பேசினேன். அவங்ககிட்டேயும் ஒரு திட்டமிருக்குது. அது ஒரு நல்ல கான்செப்ட்.” என்று மக்களிடம் பணம் பெற்றே அரசியல் செய்யப்போகிறேன் என்கிற ரீதியில் பேசியிருக்கிறார்.
உலக நாயகனின் இந்த அரசியல் யுக்தி எந்தளவுக்கு கைகொடுக்குமென்று கவனிப்போம்!...