
ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சைகளும் சந்தேகங்களும் தமிழகத்தின் உச்சத்தை எட்டியுள்ளது. ஜெயலலிதா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட செப்டம்பர் 22-ம் தேதி அன்று அவர் என்ன நிலையில் இருந்தார் என்ற விவரங்கள் குறிப்பிடப்பட்ட உடல்நிலை அறிக்கையை தனியார் தொலைக்காட்சி வெளியிட்டது.
ஜெயலலிதா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நேரத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு ஆகியவை ஜெயலலிதாவின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அதிகரித்திருந்ததும், ஆக்ஸிஜன் அளவு குறைந்திருந்ததும் அந்த அறிக்கையின் மூலம் தெரியவந்தது. இதுதொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பல்வேறு சந்தேகங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுதொடர்பான மக்களின் கேள்விகள் என திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின், சரமாரியாக அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைக்கிறார்.
அந்த கேள்விகள்:
1. மத்திய அரசின் உயர்பாதுகாப்பான இசட் பிளஸ் பாதுகாப்புப் பிரிவில் இருந்த ஜெயலலிதாவின் வாகன வரிசையில் ஆம்புலன்ஸ் இல்லாதது ஏன்? வீட்டில் மயங்கிய ஜெயலலிதாவை அந்த ஆம்புலன்ஸ் இல்லாமல் தனியார் ஆம்புலன்சில் அழைத்து சென்றது ஏன்?
2. அதிகமான சர்க்கரை அளவு, உயர் ரத்த அழுத்தம், குறைந்த ஆக்ஸிஜன் அளவு என மயங்கிய நிலையில் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது ஏன்? யாருடைய நிர்பந்தத்தின் பேரில் அந்த அறிக்கை வெளியிடப்பட்டது?
3. மயங்கிய நிலையில் அனுமதிக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த ஜெயலலிதா, காவிரி பிரச்னை குறித்து ஆலோசனை நடத்தினார் என அரசின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது எப்படி?
4. ஒருவேளை அப்படி ஆலோசனை நடத்தியிருந்தால், நுரையீரல் நோய்த்தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அமைச்சர்களும் அதிகாரிகளும் புடைசூழ ஆலோசனை நடத்துவது முதலமைச்சரின் உடல்நலனில் அக்கறை காட்டும் சிகிச்சை முறைதானா? முதல்வர் ஆலோசனை நடத்தினார் என அரசு சார்பில் அறிக்கை வெளியிட துணைபோன உயரதிகாரிகள் யார், யார்?
5. முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றிய இசட் பிளஸ் பாதுகாப்பு படையினர் எங்கே சென்றனர்? 75 நாட்கள் என்ன செய்தனர்? அந்த நாட்களில் அவர்கள் என்ன பணியாற்றினர் என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதா? அப்படியென்றால் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மத்திய அரசுக்கு அப்போதே தெரியுமா?
6. ஆளுநர், மத்திய அமைச்சர்கள் என யாருமே ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்ற மாநில அமைச்சரின் பேச்சுக்கு ஆளுநர் மாளிகையின் பதில் என்ன? மத்திய அமைச்சர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்? அக்டோபர் முதல் வாரத்துக்குப் பிறகு சசிகலாவே ஜெயலலிதாவை பார்க்கவில்லை என தினகரன் கூறும் நிலையில், இடைத்தேர்தல் விண்ணப்பங்களில் அவரது கைரேகை பதிவானது எப்படி? அப்போது அவர் என்ன நிலையில் இருந்தார்?
7. விண்ணப்பத்தில் கைரேகை பதிவு செய்யும் அளவிலேயே உடல்நலன் பெற்றிருந்த ஜெயலலிதா அம்மையார், வாக்காளர்களுக்கு விடுத்த வேண்டுகோள் அறிக்கையில் கையெழுத்திட்டது எப்படி? முதலமைச்சரின் கையெழுத்தையே மோசடியாக போடக்கூடியவர்கள் அவரைச் சுற்றியும், அவரது அமைச்சரவையிலும், தலைமைச் செயலகத்திலும் இருந்தார்களா? அப்படியெனில் என்னென்ன திட்டங்களுக்கு கமிஷன் அடிப்படையில் மறைந்த முதலமைச்சரின் கையெழுத்து இதுவரை போடப்பட்டுள்ளது?
8. முதலமைச்சரின் இலாக்காக்கள் அவரது ஒப்புதலுடன் பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்படுவதாக ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டது. மயங்கிய நிலையில், அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த ஜெயலலிதா, எந்த முறையில் தன்னுடைய இலாக்கக்களை மாற்றுவதற்கு ஒப்புதல் அளித்தார்?
9. ஜெயலலிதா இறந்ததாக அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே நள்ளிரவு கடந்த நிலையில், இடைக்கால அமைச்சரவை அமைக்கப்படாமல், பன்னீர்செல்வம் தலைமையில் முழுமையான அமைச்சரவை பதவியேற்கக் காரணம் என்ன?
10. பதவி வேட்கைக்காகத்தான் 75 நாட்களும் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்பட்டதா?
மேற்கண்ட இந்த கேள்விகள் தனக்கு மட்டும் எழுந்தது அல்ல என்றும் ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனதில் எழுந்த கேள்விகள் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இந்த கேள்விகளுக்கெல்லாம் விசாரணை கமிஷன் மூலம் உண்மையான பதில் தெரியவராது என்பதால் சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.