10 நாட்கள் மட்டும் பொறுத்துக்கோங்க.. மக்களிடம் மன்றாடிய அமைச்சர் செந்தில் பாலாஜி.. பவர் கட்டுக்கு பளீச் தீர்வு

By vinoth kumarFirst Published Jun 17, 2021, 3:28 PM IST
Highlights

இந்த மாதம் மின் கட்டணம் செலுத்தவில்லை என்றாலும், மின் இணைப்பு துண்டிக்கபடாது. நமக்கு தேவையான மின்சாரத்தை நாமே உற்பத்தி செய்தால் தான் அது மின் மிகை மாநிலம். கடந்த ஆட்சியில் மின் மிகை மாநிலம் என்று அழைத்தார்கள். ஆனால், விவசாயிகளுக்கு மின்சாரம் தரவில்லை. 

கடந்த 9 மாதங்களாக அதிமுக அரசு எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாததால் பராமரிப்பு பணிகளை முழுவதுமாக மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- சென்னையில் 83, 553 மரக்கிளைகள் அகற்றப்பட வேண்டி உள்ளது. 36, 737 மின்கம்பங்கள் பழுதடைந்துள்ளது. 25, 260 மின்கம்பங்கள் சாய்ந்துள்ளது. 29,995 தாழ்வாக செல்லும் மின்கம்பிகள். 1,023 பழுதடைந்த மின்பெட்டிகள் பராமரிக்கப்பட வேண்டும். பலவீனமான பீங்கான் 33, 356 இதை மாற்ற வேண்டிய நிலையில் உள்ளது. 

1030 துணை மின் நிலையங்கள் பராமரிக்க வேண்டி உள்ளது. மாதாந்திர பராமரிப்பு பணிகளை சரியாக மேற்கொண்டிருந்தால் தற்போது அதிகமாக பழுதுகள் ஏற்பட்டிருக்க வேண்டிய சூழல் இருக்காது. கடந்த 9 மாதங்களாக அதிமுக அரசு எந்த பணிகளையும் மேற்கொள்ளவில்லை. பராமரிப்பு பணிகளை 10 நாட்களுக்குள் செய்து முடிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதற்காக ஒட்டுமொத்த மின் வாரியத்தின் இயந்திரங்களும் பகுதி வாரியாக பிரிக்கப்பட்டு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கிறது.

இதையொட்டி மாவட்ட வாரியாக செய்ய வேண்டிய பணிகள், அதற்கான நேரம் உள்ளிட்ட விவரங்களை தயார் செய்துள்ளோம். இது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். ஒரு பகுதியில் வேலை நடக்கும் போது, மற்றொரு பகுதியில் மின் தடை ஏற்படாது. வேலை நடக்கும் இடத்தில் இரண்டு மணி நேரம் முதல் மூன்று மணி நேரம் வரை அறிவிக்கப்பட்டு பணிகள் நடைபெறும் என்று தெரிவித்தார். இதன்மூலம் வேலை நடக்கும் அடுத்த 10 நாட்களுக்கு குறிப்பிட்ட பகுதிகளில் சில மணி நேரங்களுக்கு மின் வெட்டு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

 2.77 கோடி இணைப்புகள் மின் கட்டணம் செலுத்தக்கூடிய நிலையில் உள்ளன. இவர்கள் கட்டணம் செலுத்த மூன்று விதமான வாய்ப்புகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கியிருந்தார். அதாவது, 2019ஆம் ஆண்டு மே மாதம் இல்லையெனில் மின் கட்டணம் செலுத்துவதற்கு முந்தைய மாதம் அல்லது வாடிக்கையாளர்கள் தங்களது மின் பயன்பாட்டை புகைப்படம் எடுத்து அனுப்பினால் அதற்குரிய கட்டண விவரம் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்படியொரு வாய்ப்பு தமிழகத்தில் முதல்முறை வழங்கப்பட்டுள்ளது. 

கூடுதல் மின்கட்டணம் தொடர்பாக 10 லட்சம் புகார்கள் வந்துள்ளது. அதன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த மாதம் மின் கட்டணம் செலுத்தவில்லை என்றாலும், மின் இணைப்பு துண்டிக்கபடாது. நமக்கு தேவையான மின்சாரத்தை நாமே உற்பத்தி செய்தால் தான் அது மின் மிகை மாநிலம். கடந்த ஆட்சியில் மின் மிகை மாநிலம் என்று அழைத்தார்கள். ஆனால், விவசாயிகளுக்கு மின்சாரம் தரவில்லை என்று அமைச்சர் கூறியுள்ளார்.

click me!