மூன்றாவது அலை மிக மோசமானதாக இருக்கும்.. இப்போதே நடவடிக்கை எடுங்க.. அலறும் ஓபிஎஸ்.

By Ezhilarasan BabuFirst Published Jun 17, 2021, 1:49 PM IST
Highlights

கொரோனா நோயின் தாக்கம் குறைந்து கொண்டே வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்தாலும், மூன்றாவது அலையின் தாக்கம் தவிர்க்க முடியாதது என்றும், இரண்டாவது அலையை விட மூன்றாவது அலையின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்றும், விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்து வருவதால், வரும் முன் காப்போம் என்பதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியம்.

மூன்றாவது அலை வருவதற்கு முன் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்தப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் முழு விவரம்:-  தமிழ்நாட்டில் கொரோனா நோயின் தாக்கம் குறைந்து கொண்டே வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்தாலும், மூன்றாவது அலையின் தாக்கம் தவிர்க்க  முடியாதது என்றும், இரண்டாவது அலையை விட மூன்றாவது அலையின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்றும், விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்து வருவதால், வரும் முன் காப்போம் என்பதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியம். 

முதல் அலையின் போது, அதாவது 2020ஆம் ஆண்டு இந்தியாவில் ஒருநாள் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகபட்சமாக 97 ஆயிரம் என்ற அளவில் இருந்தது. இரண்டாவது அலையின் போது அதாவது 2021 ஆம் ஆண்டு ஒருநாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகபட்சமாக 4 லட்சத்து 14 ஆயிரமாக அதிகரித்தது.  தமிழ்நாட்டைப் பொருத்தவரை முதல் அலையின் போது ஒருநாள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகபட்சமாக 7 ஆயிரம் என்ற அளவில் இருந்தது, இரண்டாவது அலையின் போது ஒருநாள் பாதிப்பு 36 ஆயிரம் என்ற அளவிற்கு உயர்ந்தது. இதன் காரணமாக இதை சமாளிக்கும் அளவுக்கு சுகாதார கட்டமைப்புகள் இல்லாத நிலை ஏற்பட்டு, ஒரு நாள் உயிர் இழப்பு என்பது அதிகரித்தது. பல்வேறு நாடுகளில் கொரோனா அலையின் தாக்கம் அதன் முந்தைய அலையை விட தீவிரமாக இருந்துள்ளது.

இரண்டாவது அலையின் தாக்கம் நமக்கு கடுமையான விளைவுகளை உண்டாக்கி, மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மூன்றாவது அலை குறித்த எச்சரிக்கையை மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ள ஏதுவாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். மூன்றாவது அலையின் தாக்கத்தை அறிய முன்கணிப்பு மாதிரிகள் மிகவும் அவசியம். இதை வைத்துதான் கொரோனா மூன்றாவது அலையின் போக்கு எவ்வாறு இருக்கும் என்பதை அறிய முடியும், இந்த முன்கணிப்பு மாதிரி களுக்கு தொற்றுநோயினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கையும் அவசியம், இதை வைத்து எதிர்காலத்திற்கு தேவையான கட்டமைப்புகளையும், மருத்துவ உபகரணங்களை தயார் செய்து கொள்வதற்கான முடிவுகளை எடுக்க முடியும்.

கொரோனா நோயினால் பாதிக்கப் பட்டவர்களுக்கும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கும் நோய் எதிர்ப்பு திறன் இருக்கும் என்பதால் இவர்களை தவிர்த்து மீதமுள்ளவர்கள் எத்தனை பேர் என்பதை கண்டறிந்து, முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கு எவ்வளவு விரைவில் தடுப்பூசி செலுத்த முடியுமோ, அவ்வளவு விரைவில் தடுப்பூசி செலுத்தவும், இதைத் தொடர்ந்து அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி செலுத்தவும், நடவடிக்கை எடுப்பது அவசியம். தமிழ்நாட்டில் 16- 6- 2021 அன்று காலை நிலவரப்படி, மொத்தம் 1 கோடியே 12 லட்சத்து 64 ஆயிரத்து 69 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டின் மக்கள் தொகை தற்போது கிட்டத்தட்ட 8 கோடி என்று எடுத்துக் கொண்டாலும், 16 கோடி தடுப்பூசிகள் நமக்கு தேவை, இதில் 1 கோடியே 12 லட்சத்து 64 ஆயிரத்து 69 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ள நிலையில், 14 கோடியே 87 லட்சத்து 35 ஆயிரத்து 931 தடுப்பூசிகள் இன்னமும் செலுத்தப்பட வேண்டும்.

அதாவது இதுவரை 7.5 விழுக்காடு தடுப்பூசிகள்தான் செலுத்தப்பட்டு இருக்கின்றன, இன்னமும் 92.5 விழுக்காடு தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டும். இதுதான் மூன்றாவது அலையை கட்டுப்படுத்த மிக முக்கியமான வழி, இது மட்டுமல்லாமல் மூன்றாவது அலையை தடுக்கும் நோக்கில் கொரோனா பரிசோதனைகளை அதிகரித்தல், உறுதியானவர்களின் இருப்பிடம் அறிந்து, அவர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்துதல். அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களை 14 நாட்கள் விலக்கி வைத்தல், முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்குதல், சமூக இடைவெளியை பராமரிக்கும் வகையில் பயணத்தில் கட்டுப்பாடுகளை விதித்து, பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்த்தல், ஆகியவற்றை தொடர்ந்து கடைப்பிடிப்பது மிகவும் அவசியம்.

எனவே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் தனிக்கவனம் செலுத்தி, மூன்றாவது அலை ஏற்படாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்க வேண்டும் என்றும், நோய்த்தொற்றின் மூன்றாவது அலை வராமல் இருப்பதற்கான கட்டுப்பாடு பொதுமக்களிடத்தில் தான் இருக்கிறது என்ற விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!